தோமஸின் கதை

யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்கள் கடந்தும், தற்போது வரைக்கும் எம்மைச் சுற்றி இராணுவம் சூழ்ந்திருக்க, பலவித அடக்குமுறைகளுக்கு மத்தியில்,  சுதந்திரமிழந்தே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இராணுவம் தற்போது வரைக்கும் எமது நிலங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டும் எமது நடமாட்டங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டும் இருக்கின்றது.

இராணுவம் ஏவிய கிபிர்த் தாக்குதலில் எனது இரண்டு கால்களையும் முழுமையாக இழந்த நான், தற்போதும் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நாளாந்த வாழ்கையினை நடாத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். 2009 தைப்பொங்கல் தினத்தன்று சிலாவத்துறை மூன்றாம் கட்டைப் பகுதியில் இராணுவத்தினரின் செல் குண்டுத் தாக்குதலில் எனது ஒரு காலிற் கடுமையாகக் காயம்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். எனக்கு அது ஒரு பெரிய காயமாகத் தெரியவில்லை. எனினும் 2009 தை மாதம் 19ம் திகதி அன்று நான் அனுமதிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் மீது இலங்கை இராணுவத்தினரின்  நான்கு கிபீர்கள் ஒன்றாகத் தாக்கியதில், எனது இரண்டு கால்களையும் இழந்து கைகளிலும் எனது பின்புறத்திலும் பலத்த காயமடைந்து தற்போது உங்களைப் போல் நடக்க முடியாத, மோட்டார் சைக்கிள் ஓட்ட முடியாத, துவிச்சக்கரவண்டி ஓட்டமுடியாத, கைகளை ஊன்றி மட்டுமே அசைந்துகொண்டு சக்கர நாற்காலியில் இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

அக்குண்டுத் தாக்குதலில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், வீதியால் சென்றுகொண்டிருந்தவர்கள் எனப் பலர் காயப்பட்டும்,  நூற்றியைம்பது, இருநூறு  பேரளவில் உடல்கள் சிதறியும் அக்கணத்திலேயே உயிரிழந்துமுள்ளனர். அத்தாக்குதலில் எனது கால்களை இழந்த நான்  சுயநினைவற்ற நிலையில் புது மாத்தளன் பகுதியிலுள்ள பாடசாலையில் இயங்கிய வைத்தியசாலைக்கு ஏற்றப்பட்டு அங்கிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கப்பல் சேவையின் முதல் நாளில் திருகோணமலை வைத்தியசாலைக்கு ஏற்றப்பட்டேன்.

பெருமளவிலான மக்கள் காயப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மக்களுக்குப் போதுமானளவு மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை. வைத்தியசாலைகளில் போதுமான இடவசதி இல்லாமல் காயப்பட்டவர்கள் வைத்தியசாலையின் மண்டப ஓரங்களில் வெறுமனே படுக்கை விரிப்பில் வளர்த்தப்பட்டிருந்தார்கள். பலருக்கு போதிய சிச்சைகள் வழங்கப்படாமல், அவர்களின் காயங்கள் கிருமித்தொற்றுக்குள்ளாகி “புழுத்து” பலர் இறந்துள்ளார்கள்.

நான் ஒரு வருடத்திற்கு மேலாக பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இறுதியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான், எனது கிராமத்திற்கு மக்களை மீள்குடியேற்றிய பின்னரே வைத்தியசாலையில் இருந்து அனுப்பப்பட்டேன்.  பல காலம் சுயநினைவிழந்திருந்த நான் பலத்த காயங்களுக்கு உள்ளாகி எனது இரண்டு கால்களையும் இழந்துள்ளேன் என்ற விடயம் தெரியவந்த போது “ஏன் நான் இவ்வளவு காயப்பட்டும் தப்பியுள்ளேன், என்னால் இனி என்ன செய்யலாம்” எனத் தீவிரமாகச் சிந்தித்துக் கவலைப்பட்டேன்.

யுத்தம் முடிவடைந்து  எமது பகுதிக்கு எம்மை மீள்குடியேற்றிய பின்னர், அவயவங்களை இழந்த என்னைப் பலர் நான் பணஉதவி ஏதேனும் கேட்டுவிடுவேன் என நினைத்து ஒதுக்கும் போது, அந்த ஓரங்கட்டல்களே எனக்கு நான் பல தொழில்களைச் செய்ய  வேண்டும் என்று முயற்சிகள் செய்வதற்கும், பல தொழில் வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதற்கும், தற்போது தோட்டத் தொழில், கடற்தொழில் போன்ற பல தொழில்களைச்  சுயமாகச் செய்வதற்கும் தூண்டுதலாக இருந்தது.

நான் தனிமையில் இருந்தேன் என்றால் எனக்குப் பல யோசனைகள் வரும். கால்கள் இருக்கும் போது நான் எப்படியெல்லாம் நடமாடித்திரிந்தேன் என்றும், தற்போது கால்களை இழந்து இப்படி இருக்கின்றேன் என்றும் பல யோசனைகள் என்னுள் வந்து செல்லும். ஆனால் நான் அப்படி யோசிக்க என்னை அனுமதிப்பதில்லை. எனது இழப்பினைப்பற்றி நான் தீவிரமாக சிந்தித்துக் கவலைப்பட்டேன் என்றால், நான் மனநலம் பாதிக்கப்பட்டு மனநல சிகிச்சைக்கான வைத்தியசாலைக்குத்தான் செல்லவேண்டும் என எண்ணி தான் செல்லவேண்டும் என எண்ணி, நான் தனிமையினைத் தவிர்த்து என்னைப்பற்றிச் சிந்திக்க அனுமதிக்காமல் நான்கு பேருடன் கதைத்துச் சிரித்து தொழில்களைச் செய்து கொண்டு வருகின்றேன்.

உயிரிழப்புகள், உடைமை இழப்புகள், அவயவங்கள் இழப்புகள் போன்ற பல்வேறு இழப்புகளைச் சந்தித்த எனக்கு, எனது கால்கள் இழப்பும் இலகுவாக தொழில்களைப் பெறுவதற்கு மிகத் தடையானதொன்றாக இருந்தது. ஒரு சிலரே எனக்குத் தொழில்கள் தருவதற்கு முன்வந்தனர். ஆரம்பத்தில் கடை ஒன்றினுள் ஒரு முதலாளிக்கு உதவியாகப் பணிபுரிந்தேன். அவர் எனக்கு மாதாந்த சம்பளப் பணத்திற்கு ஈடாக வீட்டு மளிகைப் பொருட்களினைத் தந்து உதவினார். அதன் பின்னர் வீதிப் புனரமைப்பு வேலைகளில் கூலியாளாகப் பணிபுரிந்ததைத் தொடர்ந்து டிரக்டர் வாகனம் செலுத்தத் தொடங்கிய போது போக்குவரத்துப் பொலிஸார் ஒவ்வொரு தடைவையும் என்னை மறித்து நான் வாகனம் செலுத்த தகுதியற்றவன் என்று தடுத்தனர். இவற்றைக் கடந்து ஆற்றில் மீன்படிக்கத் தொடங்கினேன். இவற்றைத் தொடரந்து கடற் தொழிலுக்குச் சென்றபோது எனது இழப்பினைக் கண்ட எவரும் எனது உழைப்பினை நம்பித் தொழில் தரமறுத்தனர். என்னைப் போல் தனது ஒரு காலை இழந்த நண்பர் ஒருவரே என்னை, எனது உழைப்பினை நம்பி கடற்தொழிலுக்குத் தன்னுடன் இணைத்துக் கொண்டார். அன்றுமுதல் ஓரளவிற்கு நிலையான தொழிலொன்றைச் செய்துகொண்டு ஓய்வுநேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளிற் பங்குபற்றியும், ஊரில் நடக்கும் நாடகங்கள் மற்றும் கலைநிகழ்வுகளிற் பங்குபற்றியும் எனது நாட்களை ஓரளவு மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறேன்.

பல தடைகளை எதிர்கொண்டு, யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்கள் கடந்தும், நாம் எளிதாகத் தொழில் செய்யக் கூடிய எமது வளங்களான எனது கடலின் சில பகுதிகளையும், நன்கு விவசாயம் செய்யக்கூடிய பல பிரதேசங்களையும் இராணுவம் தற்போது கையகப்படுத்தி வைத்துள்ளதால், அண்மையிலுள்ள எமது கடலிலும், எமது பிரதேசங்களிலும் நாம் தொழில் செய்யமுடியாமல், அவர்களின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பல தடைகளையும் சவால்களையும் கடந்தே என்னைப்போன்ற பலர் எமது அன்றாட வாழ்வினை நடாத்திக்கொண்டிருக்கின்றோம். எப்போது எமது வளங்களும், எமது தொழில்களும் முழுமையாக எமது கைகளுக்குள் வருகின்றதோ அன்று முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கான ஒருபடியைக் கடந்திருப்போம்.