கஜனின் கதை

எனது பிறப்பிடம் முல்லைத்தீவாயினும், 2001ன் ஆரம்பப்பகுதியிலிருந்து நான் கிளிநொச்சியிலிருந்தேன். 1990களின் இடைப்பகுதியில் நான் பிறந்தநாளிலிருந்து ஜயசிக்குறு என்ற இராணுவ நடவடிக்கை நிகழ்ந்துகொண்டிருந்தது. தூரத்தில் நிகழ்ந்த குண்டுச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுக்களின் சத்தங்களும் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கின்றது. கிபிர் குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதல்கள் பற்றியும் வண்டு என்ற ஆளில்லா வேவு விமானங்களின் நடமாட்டம் பற்றியும் வீட்டில் பேசியவை ஞாபகம் இருக்கின்றன. ஆனால் சிறுவயதில் முழுமையாக எதுவும் என் நினைவுகளில் இல்லை; சில சில நிகழ்வுகள் உதிரியாகவே மனதில் இருக்கின்றன.

1960களில் வேலை நிமித்தம் புகையிரதப்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது எனது பாட்டனார் சிங்களக் காடையரால் வெட்டிக் கொல்லப்பட்டார். தனது தந்தையின் முகம் ஞாபகமில்லை என அப்பா அடிக்கடி கூறுவார். அவ்விழப்பின் பின் அப்பாவின் குடும்பத்தை மாமா ஒருவரே பராமரித்து வந்தார். மட்டக்களப்பில் வசித்துவந்த எனது தந்தையின் மாமனார் இலங்கை பொலிஸின் கீழ் இயங்கிய அதிரடிப் படையினரால் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்டு 3 நாட்களின் பின்னர் அவரது குடும்பத்தினரைச் சந்திக்க  படையினர் சகிதம் கூட்டிக்கொண்டு வரப்பட்டார். அதன் பின்னர் அவர் பற்றிய எந்தவொரு தகவலும் இன்று வரை இல்லை. இவையெல்லாம் எனது அப்பா சொல்லியே எனக்குத் தெரியும்.

அதிரடிப் படையினரின் மோசமான கைதுகள், அடக்குமுறைகள், காரணமின்றி சுட்டுக்கொல்லுதல் போன்றவை நிகழ்ந்த காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவனாகவிருந்த எனது தந்தையும் சுற்றிவளைப்பொன்றில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாமொன்றில் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து விடுதலை செய்ய்ப்பட்டு, மீண்டும் கைதுசெய்யப்பட்டு 3 வருடங்கள் பூசா சிறைச்சாலையில் சிறைத்தண்டனையை அனுபவித்தார். இலங்கை-இந்திய உடன்படிக்கையின்போது அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டபோது எனது தந்தையாரும் விடுவிக்கப்பட்டார்.  அதற்குப்பின்னரும் அவருக்கு சிக்கல்கள் தொடர தனது உயர்கல்வியைக் கைவிட்டார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் வசித்துவந்த எனது அம்மாவின் பிரதேசமும் பலாலி இராணுவ முகாமுக்கு அண்மையில் இருந்தமையால் அடிக்கடி இராணுவத்தினரின் கெடுபிடிகளால் அவரும் அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டனர். அதனால் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்த எனது தாயாரும் உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்குபற்றிவந்தார். எனது பெற்றோர்கள் இருவரும் இப்படியொரு போராட்டத்திலேயே ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர். ஆகவே எனது குடும்பமானது ஏதோவொருவகையில் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புடையதாகவே இருந்தது.

2006ஆம் ஆண்டில் 5ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளை கிழக்கு மாவட்டத்திலுள்ள சம்பூர் மற்றும் மூதூரில் சண்டை நிகழத் தொடங்கியிருந்தது. அந்நாட்களில் வான் தாக்குதல்கள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. அப்போது என் வாழ்வில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்தது. கிளிநொச்சியில் நான் கல்விகற்ற பாடசாலைக்கு அருகில் 5 கிலோமீற்றர் தூரத்தில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருடைய வீடு இருந்தது. அன்றைய நாள் நாங்கள் பாடசாலை முடிந்ததும் 2.30  மணிக்கு மைதானத்தில் விளையாடுவதற்கு ஆரம்பித்தபோது கிபிர் விமானங்கள் வான் பரப்பினுள் நுழைந்தன. நாங்கள் மிகுந்த அச்சத்தோடு வகுப்பறைக்குள் இருந்த ஆசிரியரிடம் ஓடிச்சென்றபோது அவர் எங்களைத் தரையில் வீழ்ந்து பாதுகாப்பாக படுக்கும்படியாக மீண்டும் மீண்டும் கூறினார். நான் மிகுந்த அச்சமடைந்து கத்தினேன். அப்போது அந்த குண்டுவீச்சு விமானங்கள் தாழ இறங்கி குண்டுகளை வீசிச்சென்றன. அது எனது ஆசிரியரின் வீட்டின்மீது வீழ்ந்து வெடித்ததில் அவரும் அவரது மகளையும் தவிர அக்குடும்பத்தில் அனைவரும் கொல்லப்பட்டனர். இது முதன்முதலில் எனக்கு மிகுந்த பயத்தை உண்டாக்கிய நிகழ்வுவாகும். நான் குண்டுவீச்சு விமானத்திற்கு பயந்து ஓடியது, வீழ்ந்து நிலத்தின் படுத்தது, பயத்தில் கத்தியது யாவும் என் நினைவில் இன்றும் நிற்கின்றது. இதற்குப்பின் தூரத்தில் எங்கும் கிபிர் குண்டுவீச்சு விமானங்களின் சத்தம் கேட்டாலும் நாங்கள் பயந்து கத்த ஆரம்பித்துவிடுமளவுக்கு அதன் தாக்கம் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் இருந்துகொண்டேயிருந்தது.

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையன்று பரீட்சைக்கு செல்லும்போது பல்குழல் எறிகணைகள் ஏவப்பட்டுக்கொண்டிருந்தன. அது மட்டுமன்றி கிபிர் குண்டுவீச்சு விமானங்கள் எமது தலைக்குமேலாக பெரிய இரைச்சலுடன் தாழப் பறந்தபோது நாங்கள் பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தோம். இவ்வாறான பயங்கரமான சூழ்நிலையிலேயே நாங்கள் எமது கல்வியைத் தொடர்ந்தோம். தொடர்ந்தும் 2007ஆம் 2008ஆம் ஆண்டுகளில் சண்டையானது உக்கிரமடைந்துகொண்டேயிருந்தபோது 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் தவணைப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் (சரியாக நினைவில்லை) திடீரென பாடசாலை தவணைப் பரீட்சைகள் யாவும் பிற்போடப்பட்டிருப்பதாகவும் சண்டை மற்றும் இடப்பெயர்வு காரணமாக ஒரு மாதம் பாடசாலை விடுமுறை வழங்கப்படுவதாகவும் சுற்றறிக்கை வந்தது. ஆனால் அதேபோன்று ஒரு மாத இடைவெளியின் பின்னர் பாடசாலை ஆரம்பித்தபோது, 2000 பிள்ளைகள் கல்விகற்ற பாடசாலையில் ஏறத்தாள 10 மாணவர்களே வருகை தந்தனர். அந்நாள் எறிகணையொன்றின் துண்டினை எனது அம்மம்மா காண்பித்து இனியும் இங்கேயிருப்பது சரியல்ல என்று கூறினார். எறிகணை வீச்சு எமது பகுதியை நோக்கி அதிகமாகத் தொடங்க நள்ளிரவில் அப்பா என்னையும் எனது தம்பியையும்  மோட்டார் வண்டியில் ஏற்றி பாதுகாப்பான இடத்தில் கொண்டுசென்று விட்டது நினைவிருக்கிறது.

தருமபுரத்துக்குச் சென்று அங்கே ஒரு கொட்டில் அமைத்துக் குடியிருந்தோம். அங்கிருந்து விசுவமடு, தேராவில், உடையார்கட்டு, சுதந்திரபுரம், சுண்டிக்குளம் மற்றும் தேவிபுரம் என ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்துகொண்டிருந்தோம். இடம்பெயரத் தொடங்கியதிலிருந்து பதுங்குகுழிகளே எமது வாழ்க்கையானது. ஒவ்வொரு இடத்திலிருந்து இடம்பெயரும் பொழுதும் எமது உடமைகளை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு இடப்பெயர்வு நிகழும்போதும் அவர்கள் இறந்து விட்டார்கள், இவர்கள் காயமடைந்து விட்டார்கள் என்ற செய்திகளே எமது செவிகளுக்கு வந்துகொண்டிருந்தன. இச்செய்திகள் எனக்கு மிகுந்த பயத்தை உண்டாக்கியது.

தேவிபுரத்திலிருந்து இரணைப்பாலைக்கு இடம்பெயர்ந்து பெப்ரவரி மாத இறுதியில் முள்ளிவாய்க்காலை சென்றடைந்தோம். நாங்கள் இடம்பெயர்ந்து அதிக நாட்கள் தங்கியிருந்தது முள்ளிவாய்க்காலிலேயே. ஒரு நாள் மதியம் நான் உணவருந்த தயாரானபோது பல்குழல் பீரங்கி ஏவப்படும் சத்தம் கேட்கத்தொடங்கியது. எனது அப்பா உடனடியாக எங்களை பாதுகாப்பாக இருக்கும்படி கூறிய முடியவும் ஏறத்தாள 40 எறிகணைகள் எம்மைச்சுற்றி வீழ்ந்து வெடித்தன. பாதுகாப்பான அரண்களுக்குள் செல்வதற்குக்கூட அங்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வளவு வேகமாக எறிகணைகள் வீழ்ந்துகொண்டேயிருந்தன. எங்களுடைய இருப்பிடத்திலிருந்து 20 மீற்றர் தூரத்தில் வீழ்ந்து வெடித்த குண்டினால் எமது கூடாரத்துக்குப் பின்னால் இருந்த ஒரு முதியவர் உயிரிழந்தார். அந்த முதியவரும் அவரது மனைவியும் எங்களுடன் மிகவும் அன்பாகப் பழகினார்கள். குண்டு வீழ்ந்து வெடித்து ஓய்ந்ததும் அந்த முதியவருடைய மனைவி தனது கணவனுடைய தலையில் இரத்தம் வடிகிறது என்று கத்தியபோது எனது அப்பாவும் அதில் நின்ற ஏனையவர்களும் அவரைத் தூக்கியபோது அவரது தலையில் ஏற்பட்ட காயத்தினால் மூளைப்பகுதி வெளியே தெரிந்தது. அவர் அப்போதுதான் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் அவரது கிழிந்த வயிற்றிலிருந்து சோறு கொட்டியதையும் நான் பார்த்தேன். அவரது இறுதிச் சடங்கு அவ்விடத்துக்கு அருகிலேயே நடைபெற்றது.

ஆளில்லா விமானங்களின் நடமாட்டங்களும் இரவு பகல் வேறுபாடின்றி இடம்பெற்றன. எறிகணை வீச்சுக்களின் செறிவும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் அதிகரித்தவண்ணம் இருந்தன. ஒரு குறுகிய இடத்தினுள் நாங்கள் ஒடுக்கப்பட்டுவிட்டோம் என்பதை நாம் உணர்த்தொடங்கினோம். ஏப்ரல் மாத இறுதியில் தொடர்ந்து அங்கிருப்பது பயனில்லை எனத் தெளிவாகியது. மே 9, 10ஆம் திகதிகளில் பீரங்கிகள் மற்றும் மோட்டார் எறிகணைகளின் தாக்குதல்கள் அதிகமாயின. நாங்கள் பதுங்கு குழிகளுக்குள் இருந்தாலும் 9ம் திகதி எங்களைத்தாண்டி பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. சிறிது நேரத்தின் பின்னர் ஒரு தாயார் அவ்வழியால் கதறியழுதபடி ஓடி வந்துகொண்டிருந்தார். அத்தோடு சிலர் காயமடைந்தவர்களைத் தோளிற் தூக்கியபடி ஓடி வந்துகொண்டிருந்தனர். சிலர் காயமடைந்தவர்களை கைகளிலும் கால்களிலும் பிடித்துத் தூக்கியபடி ஓடிவந்தனர். ஏனெனில் நோயாளரைக் காவுவதற்கு அங்கு எதுவுமில்லை. இரட்டைவாய்க்கால்ப் பகுதியில் இருபகுதிகளிலிருந்தும் இராணுவத்தினரின் பீரங்கிக்குண்டுகள் எம்மை நோக்கி ஏவப்பட்டுக்கொண்டேயிருந்தன. 10ம் திகதியன்று தனது நண்பருடன் வெளியே சென்ற எனது தந்தையார் காலிலும் வயிற்றிலும் காயமடைந்தார்.

12 வயதேயான நான் செய்தியறிந்து அப்பாவைப்பார்க்க ஓடிச்சென்றபோது, அவரைச் சிகிச்சைக்காகப் பிக்கப் வாகனமொன்றில் ஏற்றியிருந்தனர். அந்த இடம் பொதுமக்களால் நிரம்பியிருந்ததால் வாகனத்தால் அசைய முடியவில்லை. இந்நேரத்தில் “இப்படியான சூழ்நிலையில் காயப்படுவதைக் காட்டிலும் இறந்துபோவது நல்லது. ஏனெனில் இறப்பது ஒரு நாள் வலி அது இறுதிச் சடங்குடன் முடிந்துவிடும். ஆனால் காயமடைந்தால் அதன் பராமரிப்பு மருந்து சிகிச்சை என பலவிதமான தேவைகளும் இன்னல்களும் நிறைந்தது” என்று அப்பா கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது. அந்தத் தருணம், அப்பா அந்த வாகனத்தினுள் மயக்கத்தில் இருந்ததைப் பார்த்த நான் அவர் இப்படியே இறந்துவிடுவார் என்றே நினைத்தேன். எனது குடும்பத்தினர் இடப்பெயர்வின்போது ஒவ்வொரு திக்காகச் சிதறிப்போனபடியால் அன்று ஆறுதல்சொல்ல யாரும் இருக்கவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் நின்றிருந்தேன்.

இறுதியாக மே 14ம் திகதி சத்திரசிகிச்சை செய்தபின் அப்பாவை இறுதியாகக் கண்டேன். அவர் என் மச்சானை அழைத்து தன்னால் இனி எங்களைப் பார்க்க முடியுமா எனச் சொல்லமுடியவில்லை எனக் கூறினார். என்னை கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறும் என் தந்தையார் என் மச்சாளுக்கு என்னைக்குறித்து கூறியிருந்தார். அதைக் கேட்டதும் என் மச்சாள் அழுதுகொண்டேயிருந்தார். அப்பா மச்சாளுக்குக் கூறிய விடயங்கள் பற்றியும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் மனோநிலையும் எனக்கிருக்கவில்லை. என்னை வேறு இடத்திற்கு எனது மச்சாளும் அவரை திருமணம் செய்யவிருக்கும் அண்ணாவும் கூட்டிச் செல்ல முற்பட்டபோது கனரக ஆயுதங்களின் சன்னங்கள் எமக்கு மேலாக பாய்ந்தன. எனது தந்தை வாகனத்திலிருந்தவாறே குனிந்து ஓடும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். ஒருவாறு நாங்கள் அங்கிருந்து வேறு ஓர் இடத்திற்குச் சென்றோம்.

மே 15ஆம் திகதி, அப்பாவுக்காகக் காத்திராமல் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட முடிவுசெய்தோம். அன்றிரவு முழுவதும் நந்திக்கடல் பக்கமாக பயங்கரமான வெடிச்சத்தங்களும் குண்டுச் சத்தங்களும் கேட்டுக்கொண்டேயிருந்தன. கவசவாகனத்தின் எறிகணைகள் எமக்கு அண்மையாக வீழ்ந்து வெடித்தன. பதுங்குகுழியிலிருந்து வெளியே வந்துபார்த்தபோது வெளிச்சத்துடன் துப்பாக்கிச் சன்னங்கள் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. மே 16ஆம் திகதி இரட்டைவாய்க்கால் பக்கமாக முன்னேறிக்கொண்டிருக்கும் படையினரின் தாக்குதல் மிகவும் உக்கிரமாக இருந்ததால் அப்பக்கம் போக பயமாக இருந்தது. வட்டுவாகல் வழியாக முன்னேறும் படையினரிடம் சரணடைந்தால் உயிருடனாவது தப்பலாம் என்ற எண்ணத்தில் வட்டுவாகலை நோக்கி நடந்தோம். நந்திக்கடல் கரையோரத்திலுள்ள ஒரு பனங்கூடல் வழியாகச் சென்றபோது அவ்விடத்துக்கருகிலிருந்து கனரக ஆயுதத்தினால் ஒரு நிமிட இடைவெளியில் தொடர்ச்சியாக எம்மை நோக்கி சுட்டனர். சிறிது நேரத்தின் பின்பு படையினர் எம்மைச் சரணடைய வருமாறு அழைத்தனர். இரண்டு பாதிரியார்களும் ஒருசில ஐயர்மார்களும் முன்னே முதலில் சென்றனர். அவர்கள்  பின்னால் நாங்களும் சென்று படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் கால் பதித்தோம்.

2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்று முதன் முதலில் இராணுவத்தினரைப் பார்த்த பின்னர் அந்நாளிலேயே நான் மீண்டும் அவர்களைப் பார்த்தேன், அதுவும் காவலரணில் இருக்கும் இராணுவத்தினரை மட்டுமே பார்த்த எனக்கு யுத்தத்திற்குத் தயாரான நிலையில் அவர்களைக் காண்பது மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது. அங்கு பெரும்பாலான படையினரின் துப்பாக்கிகளின் சுடுகுழல்கள் எம்மை நோக்கியே இருந்தன. மக்கள் கூட்டம் அவர்களுடைய காலலரண்களுக்கிடையில் குவிந்தபோது எங்களுக்குப் பின்னால் தூரத்தில் வந்துகொண்ருந்தவர்களை நோக்கி எங்களுக்கு முன்னால் நின்ற குறிபார்த்துச் சுடும் இராணுவச் சிப்பாய்கள் சரமாரியாகச் சுட்டனர். அவாகள் யாரை நோக்கிச் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியாது. நாங்கள் வட்டுவாகல் பாலத்திற்கருகில் சென்றபோது ஒரு பெண்மணியின் இறந்த உடல் கையில் கைப்பையுடன் காணப்பட்டது. அந்த இறந்த பெண்மணியில் தொடைப்பகுதி பிளந்திருந்தது. சிலர் பாலத்தின் கரைவழியாக தண்ணீரினுள் நடந்து இராணுவத்தினரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வட்டுவாகல் பாலத்தின் வடக்குப் பக்கமாக மக்கள் வருவதை படையினர் தடுத்தனர். அங்கே 10க்கு மேற்பட்ட கவச வாகனங்கள் தயார் நிலையில் நின்றிருந்தன. படைச் சிப்பாய்கள் யாவரும் கறுப்புத் துணியால் தங்கள் தலைகளைக் கட்டியிருந்தனர். அவர்கள் எங்களுடன் உடையாடிய உடல்மொழி மிகவும் மோசமாக இருந்தது. அவர்கள் கூறும் மொழி பலருக்கு விளங்காமலிருந்தமையால் அவர்கள் மக்களிடம் கடுமையாக நடந்துகொண்டனர். எனக்கு அருகிலிருந்த ஒருவர் நான் குடிப்பதற்கு தண்ணீரை எடுத்தபோது தண்ணீரில் பல இறந்த உடல்கள் மிதந்து கிடந்ததால் அதைக் குடிக்க வேண்டாமெனக் கூறினர். எனினும் நான் அதைப் பொருட்படுத்தாமல் வேறு வழியின்றி குடித்தேன். இறந்த உடல்களில் ஊறிய தண்ணீரைக் குடித்த அந்த அருவருப்போ பயமோ அப்போது எனக்கு இருக்கவில்லை.

அன்றிலிருந்து தொடர்ந்து 4 அல்லது 5 நாட்களுக்கு கஞ்சியே எமது உணவாக இருந்தது. அதிலும் சோற்றை விட அதிலுள்ள தண்ணீரின் அளவே அதிகம். அப்படியே ஒரு பனங்கூடலை ஒட்டி  ஒரு வயல் பகுதியில் இராணுவத்தினர் எம்மை கூட்டி வந்தனர். ஒரு பெரும் மக்கள் கூட்டம் அங்கு திரண்டிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களை சரணடையுமாறு ஒலிபெருக்கியால் இராணுவத்தினர் அறிவித்துக் கொண்டிருந்தனர். எனது தந்தையார் இச்சனத்திரளுள் இருப்பாரா என நான் தேடியபோதும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற தகவலை அறிந்துகொள்ள அங்கு எந்த சந்தர்ப்பங்களும் இருக்கவில்லை. நாங்கள் இருந்த வயல்வெளியிலிருந்து பார்த்தபோது சண்டை மிக உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது தெரிந்தது.

இதன்பின்னர் மக்கள் அனைவரையும் உடல் சோதனைக்கு உட்படுத்தினர். அனைவரையும் நிர்வாணமாக்கியே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு ஆண் பெண் என்ற பேதமின்றியே இது நிகழ்ந்து. சோதனை முடிந்ததும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்தில் எங்களை ஏற்றினர். 18ஆம் திகதி மே மாதம் ஒலிபெருக்கியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்கள் யாவும் விடுவிக்கப்பட்டுள்ளதென்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள், அவர்களது குடும்பங்கள், புலிகளுக்கு உதவிசெய்தவர்கள் யாவரும் சரணடையவேண்டுமென்றும் அறிவித்தனர். எனது அப்பாவும் அம்மாவும் அவர்களது இளம் வயதில் அரசுக்கெதிரான போராட்டங்களில் ஈடுபட்டிருந்ததால் எனது வயதைப் பாராமல் இராணுவத்தினர் என்னையும் கைது செய்துவிடுவார்கள் என நினைத்தேன். அன்றைய தினமே மாலை எங்களை செட்டிக்குளத்திலுள்ள வலயம் 4க்கு அனுப்பிவிட்டனர். காயங்காரணமாக சில மாதங்களிற்கு முன்பே வெளியில் வந்த அம்மப்பா மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் முகாமிற்குள் வந்து என்னுடன் பேசினார். காயமடைந்துள்ள அப்பா தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதுவே மிகுந்த ஆறுதலைக் கொடுத்தது.

இப்போது நான் எனது சொந்த முயற்சியில் தொழில் நிறுவனமொன்றை ஆரம்பித்து வளர்ந்து வந்து கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் இந்நிகழ்வுகள் மிகுந்த மனப்பாரத்தை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன. சரணடையும்போது ஆடைகள் களையப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது நான் ஒருவித அவமானத்தை உணர்ந்தேன். எனது மேல்சட்டையையும் காற்சட்டையையும் களைந்தபோது நான் பயத்தில் உறைந்துபோயிருந்தேன். ஆடைகள் களையும் போது அருகிலிருப்பவர் தாயா அல்லது பிள்ளையா என்ற பேதமின்றி செயற்பட்ட இராணுவத்தினரின் செயற்பாடுகள் பல இன்னல்களுக்குப் பிறகு உயிர்பிழைத்து உயிரைமட்டுமே கையிற் கொண்டுவந்த ஒரு மக்கள் திரளுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துவதாகும்.

இந்த இறுதி யுத்தத்தில் நான் பார்த்து அனுபவித்த விடயங்களுக்கும் தமிழ் மக்களை மீட்கின்றோம் எனும்பெயரில் இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கும் ஒத்துப்போகாத தன்மையை நான் வளர்ந்தபோது புரிந்துகொண்டேன். இறுதியுத்தத்தில் நடந்தது நூற்றுக்கு நூறு வீதம் இராணுவ நடவடிக்கையே அன்றி மனிதாபிமானப் பணியல்ல. எம்மை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டதிலிருந்து, எறிகணைகளை ஏவியது, குறிபார்த்துச் சுட்டது, நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியது யாவுமே மனிதாபிமான நடவடிக்கைக்குள் அடங்கா.