எனக்கு முப்பது வயதாகிறது. பிறந்ததில் இருந்து புதுக்குடியிருப்பில் இருக்கிறேன். இரண்டு சகோதரிகளும் அண்ணாவும் திருமணம் செய்து தனியாக இருக்கிறார்கள். நான் எனது அப்பா, அம்மாவுடன் இருக்கிறேன். யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் சண்டை நடக்கிறதென்று முன்பு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒருநாளும் சண்டையை நேரடியாகக் காணவில்லை. ஆனால் 2006ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் போரைச் சந்தித்தேன், அது எம் வாழ்வை புரட்டிப்போட்டுவிட்டது. 2007 இன் பின்னர்தான் போரைப் பற்றியும் அதன் உக்கிரம் பற்றிய பயங்கரமும் புலப்பட்டது; அப்போது எனக்கு 14 வயது.
2009ம் ஆண்டு 10ம் வகுப்பிலிருந்து முன்னேறி க.பொ.த சாதாரணதரம் படிக்கத் தொடங்கியிருக்கவேண்டும். ஆனால் ஜனவரி மாதம் பிரச்சினை தொடங்கிவிட்டது. எங்களைச் சுற்றியிருந்த எல்லோரும் தேவிபுரம் என்ற கிராமத்திற்கு செல்ல நாங்கள் எங்கள் அப்பம்மாவின் வீட்டைநோக்கி ஆனந்தபுரத்துக்குச் சென்றோம். மார்ச் மாதத்தில் ஆனந்தபுரத்தில் குறுகிய இடங்களில் அமைக்கப்பட்ட ஏராளமான கூடாரங்கள் ஏனைய இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களால் நிரம்பி வழிந்தன. அப்போதுதான் கொத்துக் குண்டுத் தாக்குதல் ஆரம்பித்தது. எமது காணிக்கு முன்னால் இயக்கத்தின் தளம் ஒன்று இருந்தது. எங்களுக்கு தெரிந்த அண்ணன்மார் அங்கு காவலுக்கு இருந்தனர். குண்டுச் சத்தம் கேட்டவுடன் நாங்கள் பதுங்குகுழிகளுக்குள் ஒளித்துக்கொண்டோம். அந்த நேரம் வீழ்ந்த குண்டுகள் கொத்துக்குண்டுகள் என்று எமக்குத் தெரியாது. ஆனால் குண்டுகள் வீழ்ந்து வெடித்து அதிலிருந்து செல்லும் குண்டுகள் மேலும் மேலும் வெடிக்கின்றதை எமது கண்களால் கண்டோம். பதுங்கு குளிக்குளிருந்து பார்க்கும்போது ஓர் அண்ணா குண்டு வெடித்துப்பற்றிய நெருப்பில் அகப்பட்டு முழுதாகத் தீப்பிடித்து அங்கும் இங்கும் ஓடியதைப் பார்த்தோம். இதுவரைக்கும் என் கண்முன்னே ஓர் உயிர் இறந்ததைப் பார்க்காத எனக்கு அதைப்பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. மறுநாள் காலையில் வெளியே சென்று பார்த்தபோது கொத்துக்குண்டுகள் வீழ்ந்து வெடித்து வீடுகளும் அவற்றின் அருகிலிருந்த மரங்களும் எரிந்திருந்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது.
எங்களது வீட்டில் இயேசு நாதரின் சொரூபம் ஒன்று இருந்தது. இந்த குண்டுத்தாக்குதல் நடப்பதுக்கு முதல் நாள் இச்சிலை விழுந்து அதன் தலை உடைந்துவிட்டது, இதனைப் பார்த்த எனது தாயார் இனி இங்கே இருப்பது சரியல்ல என்றும் வேறு இடத்திற்கு போவோம் என்று கூறினார். நாங்கள் இருந்த வீட்டுக்கருகில் விடுதலைப் புலிகளின் காவல்துறை நிலையத்தின் சிறுவர் நன்னடத்தைப்பிரிவு இருந்ததாலும், அதனால் இங்கே தாக்குதல் நடக்கும் வாய்ப்புகள் அதிகமெனத் தெரிந்ததாலும் கையிற் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக வலைஞர்மடத்துக்கு வந்து சேர்ந்தோம். எனது அக்காவுக்கு ஒரு வயதுக்குக் குறைவான குழந்தை இருந்ததால் வேறு இடத்துக்குப் போவோம் என முடிவெடுத்தோம். நாங்கள் அங்கேயிருந்து புறப்பட்டு மாத்தளன் என்ற இடத்திற்கு போனோம்.
நாங்கள் இருந்த இடத்துக்கு முன்னாலிருந்த முன்பள்ளியைத் தற்காலிக வைத்தியசாலையாக மாற்றி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அப்பாவும் அம்மாவும் எங்களிம் இருந்த சேலைகளை சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து பன்டேஜ் ஆக மாற்றி காயமடைந்தவர்களுக்கு கட்டுவதற்கு உதவி செய்யச் சென்றார்கள். இப்பிடியிருக்கும்போது குளிப்பதும் காலைக்கடன்களைக் கழிப்பது என்பது மிகவும் கடினம். இதனால் நாங்கள் நாட்கணக்காக குளிக்காமலேயே இருப்போம். சண்டைகளும் கொஞ்சம் கிட்ட கிட்ட வரத் தொடங்கிவிட்டது, சாப்பிடுவதற்கும் ஒன்றும் இல்லாமல்ப் போய்விட்டது. இந்நேரம் எமது அப்பப்பாவும் இறந்துவிட அவரை வலைஞர்மடத்தில் புதைத்துவிட்டு வேறு வேறு இடங்களிற்கு தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டிருந்தோம். என்ன இருக்கிறதோ அதைமட்டும் சாப்பிட்டுக்கொண்டு வெளியிலே வரவும் முடியாமல், திரும்பி போகவும் முடியாமல் நடுவிலே மாட்டியிருந்தோம். தொடர் இடம்பெயர்வுகளுக்குப்பின் இறுதியில் ஒருவழியாக முள்ளிவாய்க்காலுக்கு வந்து சேர்ந்தோம்.
முள்ளிவாய்க்காலில் முதல் ஒரு இடத்தில் ஒரு கூடாரத்தில் இருந்தோம். அந்த நிலவமைப்பு பதுங்குகுழி அமைப்பதற்கு சாதகமாக இல்லை. நாங்கள் சென்ற இடத்திலும் பதுங்குகுழிகள் வெட்டுவதென்பது கடினம். அதனால் கூலிக்கு யாரையாவது அதை வெட்ட அமர்த்துவதென்று தீர்மானித்தோம். அந்த இடத்தில் செருப்பு இல்லாமல் நடக்கவே முடியாது. ஏனெனில் அது முட்கள் நிறைந்த பற்றைக்காடு. அதிலே பதுங்குகுழி வெட்டுவதென்பது பெரிய வேலை. பதுங்குகுழி வெட்ட வந்தவர்கள் தமக்கு கூலி வேண்டாம் சாப்பாடு மட்டும் தரும்படி கேட்டனர்.
வழமையாக சோறு ஆக்கி அதன் கஞ்சியைக காலையில் குடித்துவிட்டு மதிய உணவாகச் செத்தல் மிளகாயை பொரித்து அல்லது வாட்டிவிட்டு அதனை சோற்றுடன் சாப்பிடுவோம். அதைத்தான் கூலியாட்களுக்கும் கொடுத்தோம். இந்த நேரத்தில் முள்ளிவாய்க்காலில் கஞ்சி கொடுக்க ஆரம்பித்தனர். யாராவது சென்று வாங்கிக்கொண்டு வந்தால் தான் அதைச்சாப்பிட முடியும். ஆண்கள் தான் அதிகம் கஞ்சிவாங்கப் போவார்கள். தொடர்ந்து எறிகணைகள் விழுந்துகொண்டிருந்ததால் வெளியே போனால் குண்டுகள் அல்லது அதன் சிதிலங்களால் தாக்கப்படக்கூடும் என்றதால் என்னை எப்போதுமே பதுங்குகுழியினுள் இருக்கச்சொன்னார்கள். அந்நேரங்களில் தண்ணீர் எடுப்பதற்கும் தூரத்தில் இருக்கும் ஒரு கிணற்றுக்குப் போகவேண்டும். ஆனால் எறிகணைகள் விழுந்துகொண்டிருந்த காரணத்தால் அடிக்கடி தண்ணீரும் எடுக்க முடியாது. எங்கள் உறவினர்களுள் ஒருவர் இறால் பிடிப்பதற்குக் கடற்கரைக்குச் செல்வார். அப்படி ஒரு நாள் அங்கு சென்றபோது எறிகணைவீச்சுக்கு இலக்காகி அங்கேயே இறந்துகிடந்தார்.
பதுங்குகுழிக்குள் நான் இயேசுநாதர் மற்றும் புனித மரியாளின் படங்களை வைத்திருந்தேன். அடிக்கடி செபமாலையை வைத்து செபிக்கவும் செய்வேன். செபம் முடியும்வேளை குண்டுச்சத்தமும் நின்றுவிடும். செபத்தால் நிற்கவில்லையென்றாலும் நான் என் செபத்தால்தான் அது நின்றதென்று நம்புவேன். அன்றையநாள் “5 இஞ்சி செல்” ஒன்று பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்த இன்னொரு பதுங்குகுழியிலே விழுந்து அதில் இருந்த ஒருவர் இறந்துபோனார். அன்றையதினம் வெயிலதிகம் என்றபடியால் பலருக்கு உடல்நிலை சரியில்லாமல் வயிற்றோட்டம் ஏற்பட்டது. இயற்கைக்கடன்களை கழிப்பதெனின் நந்திக்கடலுக்கே போகவேண்டும் என்றதால் அங்கே அடிக்கடி போய் வரவேண்டியிருந்தது. எறிகணைகள் எங்களை சுற்றிவர விழுந்துகொண்டேயிருந்தன. எறிகணைச் சிதிலங்களைத் தாண்டி போய்வருவது பயங்கரமாக இருந்தது. மத்தியானம் கழிந்து பின்னேரத்தில் தான் தாக்குதல்கள் உக்கிரமாயிருக்கும்.
பதினாறாம் திகதியன்று வெளியில் செல்ல எத்தனிக்கலாமென்று அக்காவின் ஒரு வயது குழந்தைக்கு உடையணித்துவிட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். பகல் நேரத்தில் பதுங்குகுழியினுள் அதிக நேரம் இருக்க முடியாது. ஆனாலும் வேறுவழியின்றி அழுதுகொண்டிருக்கும் அக்காவின் குழந்தைக்கு பராக்குக் காட்டியபடி இருந்தேன். ஒரு 4.30க்கும் 5மணிக்குமிடையில் பதுங்குகுழி வாசலிலே வந்து அக்கா இருந்தார். அவரை கண்டவுடனே குழந்தை அவரிடம் போவதற்கு எத்தனித்தது. குழந்தை ஒரு சின்ன உள்ளாடை அணிந்திருந்தது. குழந்தை தாயிடம் போவதற்கு எத்தனிக்கும்போதெல்லாம் நான் குழந்தையை விடாமல் காலைப்பிடித்து வைத்திருந்தேன்.
குழந்தை அம்மாவிடம் போவதற்கு அவசரப்பட்டுக்கொண்டிருந்ததால் நான் இழுக்கவும் குழந்தை பாயவும் குழந்தை அக்காவிடன் போக அது அணிந்திருந்த உள்ளாடை கழன்று எனது கையில் வந்துவிட்டது. எந்தவொரு சத்தமும் கேட்காததால் நான் பதுங்கு குழிக்குள் இருந்து விட்டேன். சிறிது நேரத்தில் அம்மா கதறியழும் சத்தம் கேட்டது. நான் பதுங்குகுழியிலிருந்து எட்டிபார்த்தபோது அம்மா தான் கையில் குழந்தையுடன் தெரிந்தார். அம்மா குழந்தையை உலுப்பினாலும் எந்த ஒரு அசைவும் இல்லை. குழந்தையின் தலைக்குள் எறிகணைச் சிதில் போயிவிட்டது, ஆனால் வெளியில் வரவில்லை. அம்மாவின் முகத்திலும் பல எறிகணைச் சிதில்கள் பட்டு முகம்முழுவதும் இரத்தம் வடிந்துகொண்டிருந்ததும் எனக்கு உடனே கல்லறை ஆண்டவரின் (மரணிக்கப்பட்ட இயேசு) முகம் நினைவுக்குவந்ததும் இப்போதும் நினைவுள்ளது. சிறிய கணைத்துகள்கள் ஒருபக்கத்தால் போய் மறுபக்கத்தால் வந்திருந்த அடையாளங்கள் தெரிந்தன.
எனக்கு உடனே என்ன நடக்கின்றதென்றே விளங்கவில்லை. அதிர்ச்சியில் அழுகையும் வரவில்லை. பதுங்குகுழியை விட்டு வெளியில் வந்துபார்த்தபோது எனக்குத்தெரிந்த உறவினர் சிலர் காயப்பட்டும் வேறுசிலர் இறந்துபோயும் இருந்தனர். இதன்பிறகுதான் நான் அக்காவைக் கவனித்தேன். அவருக்கு தலையில் காயம்பட்டிருந்தது. போட்டிருந்த சட்டையின் முதுகுப்புறம் கிழிந்து எண்ணற்ற ஏவுகணைத் சிதிலங்கள் உட்சென்று முதுகு முழுவதும் சிதைந்து போயிருந்தது. நான் உறைந்து போயிருந்தேன். அக்கா நினைவிழந்து போயிருந்ததால் குழந்தை இறந்தது உடனே தெரியாது. அக்காவை பக்கத்தில் இருந்த கூடாரத்துக்கு அழைத்துச்சென்று மருத்துவம் வழங்கப்பட்டது. தாதியாக வேலை செய்த ஒருவர் அக்காவின் தலைமுடியை வெட்டி, காயத்தை துப்பரவு செய்துவிட்டு சுகாதாரத் திண்டு (Sanitary pad) வைத்து இரத்தப்பெருக்கை நிறுத்த முயற்சி செய்தார். ஏவுகணைத் சிதிலங்கள் பட்ட இடங்களெல்லாம் முதுகிலே பள்ளங்களாக இருந்தன.
அவ்விரவே பெரும்பாலானவர்கள் வேறிடத்திற்கு இடம்பெயரத்தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல குழந்தையின் உடலின் நிறம் மாறத்தொடங்கியதால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டன்று போட்டிருந்த உடைய அது ஆசீர்வதிக்கப்பட்டிருந்ததால் குழந்தைக்கு அணிவித்து புதிதாக ஒரு கிடங்கு வெட்டி மண்போகாதவாறு துணிகளாற் சுற்றி குழந்தையைப் புதைத்தோம். குழந்தை இறந்தவுடனேயே கடவுளிருந்தும் என்ன பயனென ஆதங்கப்பட்டு உடைத்த படங்களை குழந்தையோடு சேர்த்துப் புதைத்தோம். குழந்தையை அடக்கம் செய்துவிட்டு ஒருவரையொருவர் தாங்கிப்பிடித்துக்கொண்டு நாங்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேறினோம்.
இருந்த ஒரு துவிச்சக்கரவண்டியில் நடக்கமுடியாமலிருந்த அக்காவை இருத்தி உருட்டிக்கொண்டு போனோம். உயிரிருந்தும் இறப்பின் விழிம்பிலிருந்தவர்கள் தங்களை கைவிட்டுட்டுப் போகுமாறு கூறினார்கள். எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் உயிருடன் இருந்தவர்களைக் கைவிட்டுச் சென்றோம். நாங்கள் பிரதான வீதியை வந்தடைந்தபோது அதன் இருபக்கங்களிலும் நெருப்பு பற்றி எரிந்துகொண்டிருந்தது. எனக்கு இன்றும் வீதியின் இரண்டு பக்கமும் ஆங்கிலப் படங்களில் சித்தரிக்கப்படுவதுபோல் வீதியின் இருபக்கங்களிலும் வாகனங்கள் பற்றி எரிந்துகொண்டிருந்த காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கின்றது. ஒருநாள் முழுவதும் தண்ணீர் குடிக்காததால் மிகவும் தாகம் எடுத்தது. வீதிக்கரையில் ஒருவாளிக்குளிருந்த தண்ணீரை அது என்ன என்று சிந்திக்காமல் எடுத்துத் தாகத்தில் குடித்து விட்டேன். குடிக்கும்போதுதான் அதிலேயிருந்து ஒரு மணம் வரத்தொடங்கியது. அது காயங்கள் கழுவிய தண்ணீரென்று சில நொடிகளில் விளங்கியது.
நாங்கள் என்கே நிற்கின்றோம், யாரின் கட்டுப்பாட்டுக்குள் போகின்றோம் என்பது தெரியவில்லை. நாங்கள் வட்டுவாகலுக்கு அருகிற் போகும்போது பல இறந்துபோனவர்களின் உடல்கள் சில்லறைக் காசுகள்போல் சிதறிக்கிடந்தன. அவை பல நாட்களாக அங்கே இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவ்வுடல்களில் தூசி படிஞ்சிருந்தது. அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் உடல்கள் நிறைய நாட்களாக கிடந்திருக்கவேண்டும். வட்டுவாகல் கடலிலும் உடல்கள் மிதந்துகொண்டிருந்தன. கடலிலே மிதந்துகொண்டிருந்த உடல்கள் உப்பி, வெளிறி, பதப்படுத்தப்பட்ட மீன் போன்று இருந்தன.
காயப்பட்டவர்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அம்மாவுக்கு பாரிய காயம் இல்லாவிட்டாலும் அக்காவைத் தனியாக விடமுடியாது என்பதற்காக அம்மா தானும் அக்காவுடன் வாகனத்திலேறினார். அப்போது எனக்கு சரியாக இடங்கள் தெரியாததால் எங்கே கொண்டுபோகப்போகின்றார்களெனத் தெரியாது. நானும் அப்பாவும் அண்ணாவும் எங்கள் உறவினர்களும் வாகனத்திலேற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டோம். ஒருநாள் முழுவதும் சாப்பாடு இல்லாமல்ப் பயணித்தோம். குழந்தைக்குக் கொடுக்கின்ற சமிபாட்டுத் திரவத்தையே தாகத்தைப்போக்குவதற்குக் குடித்தோம். இடையில் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் அழுக்குப்படிந்த தண்ணீர் தேநீரின் நிறத்தில் இருந்தது. தாகம் தாங்கமுடியாமல் பெரும்பாலானோர் அத் தண்ணீரைத்தான் குடித்தார்கள்.
பின்பு ஒரு பாரிய சோதனைச்சாவடியைத் தாண்டவேண்டியிருந்தது. அவ்விடத்தைக் கடந்து இராணுவத்தின் கடுப்பாடுக்குள் செல்லவேண்டுமாயின் ஒவ்வொருவரும் ஆடைகள் முழுவதையும் கழற்றி சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகுதான் போகலாம். அப்பாவும் அண்ணாவும் வேறு ஒரு கூடாரத்துக்குள்ளாலும் நான் இன்னொரு கூடாரத்துக்குள்ளாலும் போனோம். அப்போது நான் இதுபற்றிச் பெரிதாகச் சிந்திக்கவில்லை. அப்போது நான் மண்ணிற காற்சட்டையும் மண்ணிற சட்டையும் போட்டிருந்தேன்.
சோதனைக்காக ஆடைகளைக் கழற்றவேண்டியிருந்தது ஒரு பெரிய விடயமென நான் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அக்காவும் அம்மாவும் என்னோடு வந்திருந்தால் எனக்கு ஒரு மன ஆறுதலாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. உண்மையில் தனியாக அப்படியொரு அவமானத்தைச் சந்தித்தது எனக்கு கடினமாகத்தான் இருந்தது. அப்போது எனக்கு 16 வயது என்பதனாலும் நான் அப்போது பெரிய தோற்றமான ஆளில்லை என்பதனாலும் அவ்விடயம்பற்றி நான் பெரிதாகச் சிந்திக்கவில்லை. இதை இப்போது சிந்திக்கும்போது இது அண்மையில் நடந்தது போலவும் இது எல்லோருக்கும் நடந்ததென்பது வேதனையையும் தருகிறது.
ஒரு நாள் முழுவதும் பேருந்திலிருந்தபின் வலயம் 4 க்கு கொண்டுபோனார்கள். எங்கே ஏற்றப்படுகின்றோம்;, எங்கே கொண்டுபோகின்றார்கள் என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. இடையிலோரிடத்தில் நிறுத்தி நூடுல்ஸ் பைகள் தரப்பட்டது. நாங்கள் அதனை உடனேயே உடைத்து வெறுமையாகவே சாப்பிட்டோம்.
பிறகு அங்கிருந்து நாங்கள் முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்டோம். ஒருமாதத்துக்குப் பின் தொடர்பு ஏற்படுத்திய பிறகுதான் எம்மைப்பிரிந்திருந்த நாட்களில் அம்மாவும் அக்காவும் பதவியா வைத்தியசாலையில் இருந்தார்கள் என்பது தெரிந்தது. அம்மா அக்காவுடன் போனது அக்காவை உடனிருந்து கவனிப்பதற்கு உதவியாக இருந்திருந்தது. அக்கா வலியில் எழும்பி ஓடி விடுவதையும், பிள்ளையின் நினைவில் அடிக்கடி கத்துவதையும் அம்மா உடனிருந்ததால்த்தான் கவனிக்க முடிந்தது.
யுத்தத்தில் தப்பிய பலர் முகாமிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்கள். எனது மச்சாளும் முகாமில் இறந்குபோனாள். எனக்கும் கடுமையான நோய் வந்து சாவின் விளிம்பிற்குச்சென்றுதான் தப்பிப்பிழைத்தேன். யுத்தகாலத்தில் உட்கொண்ட சுகாதாரமில்லாத உணவுகள் மற்றும் தூய்மையற்ற தண்ணீரின் விளைவுகள் முகாமிலிருக்கும்போதுதான் பாதிப்பை வெளிக்காட்டின.
அக்காவுக்கு இடுப்பிலும் ஏவுகணைத் சிதிலம் தாக்கியிருந்ததால் குழந்தைபெற முடியாதெனக் கூறப்பட்டிருந்தாலும், ஏதோ அதிர்ஷ்டவசமாக குழந்தை கிடைத்து இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். அம்மாவுக்கு வாயினுள், குறிப்பாக பல்லுக்குள், எறிகணைத் சிதிலம் இருக்கின்றதால் சிலநேரம் வலி வந்து அவதிப்படுவார். இருந்தாலும், அவர்கள் உயிருடனிருப்பது எனக்குப் பெரிய ஆறுதல். அப்பாவும் கிளைமோர் குண்டுத் தாக்குதலில் காயப்பட்டதால் அடிக்கடி வலியால் அவதிப்பட்டாலும் உயிரோடுதான் இருக்கிறார். எங்களைச் சுற்றியிருக்கின்ற எல்லோரும் ஏதோ ஒருவகையில் யுத்தத்தாலும் ஏவுகணைத்தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டவர்கள்தான். அக்காவுக்கு இப்போதுதான் 39 வயதாகிறது; இருந்தாலும் தலையில் காயம்பட்டதால் பார்வை குன்றிப்போய்விட்டது. அண்ணாவுக்கு உடலுள் உள்ள ஏவுகணைத் துகளை வெளியில் எடுத்தால் அவர் முடமாய்ப்போய்விடுவார். அவரால் நீண்டநேரம் வெய்யிலில் நிற்கவோ, கடினமான வேலை செய்யவோ இயலாது.
கடவுள் கிருபையால் எனக்கு உடலளவில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் மனதளவில் நான் உடைந்து போய்விட்டேன். சண்டை நடக்கும்போது என்னால் மனதுடைந்துபோகவோ உணர்ச்சிகளை வெளிக்காட்டவோ முடியவில்லை. உணர்வுகளெல்லாம் உறைந்துபோன நிலையில்த்தான் இருந்தேன். குழந்தை இறந்த பிறகு கடவுள் நம்பிக்கை குறைந்துபோனாலும் கடவுளின் கிருபையில்லாமல் இவ்வளவு தூரம் எல்லாத் துன்பங்கயையும் தாண்டி வந்திருப்போமா என்று எனக்குத் தெரியாது.
யுத்த காலத்தில் நாங்கள் இடம்பெயர்ந்து இருந்த இடங்களையும், கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த இடங்களைப் போய்ப் பார்த்தேன். நான் உடைத்தெறிந்த கடவுளின் படங்களெல்லாம் புதைத்த இடத்திலிருந்தது. ஆனால், குழந்தையின் ஆடைகளையும் எலும்புகளையும் அங்கே காணவில்லை. அவ்விடத்தில் பலரது உடல்களைப் புதைத்திருந்தோம்; இறக்கும் தருவாயிலிருந்து பலரை அங்கே கைவிட்டு வந்திருந்தோம். ஆனால் ஒருவரின் எலும்புகளையும், தடயங்களையும் காணமுடியவில்லை.
கடந்துவந்த அனுபவங்கள் எங்கள் எல்லோரையும் பாரதூரமாகத் தாக்கியுள்ளது. இக் கொடூரமான அனுபவங்கள் எங்களைப் பாதிக்காததுபோல் நாங்கள் இப்போது நடந்துகொண்டாலும், அது உண்மையில்லை. இவ்வனுபவங்களிலிருந்து எவராலும் இலகுவில் மீண்டுவர முடியாது. இன்னும் நீண்ட காலத்துக்கு மன அதிர்வு மற்றும் பின்தாக்க இறுக்கக் கோளாறு (PTSD) எங்களுடன் இருந்துகொண்டே இருக்கும். இப்போதும் பாரிய சத்தம் ஏதாவது கேட்டால் நான் பாய்ந்து ஓடி ஒளிந்துகொள்வேன்.
போர் ஏன் நடந்தது, எப்படி நடந்தது, எப்படி முடிந்ததென்று எங்களுக்குத் தெரியும். ஆனால் எங்களுக்கு பிறகு வந்த தலைமுறைக்கு இவைபற்றி முழுமையாகத் தெரியாது. இந்த யுத்தம் முடிந்தபிறகும்; எங்களை நிம்மதியா வாழவிட மறுக்கின்றார்கள். நாங்கள் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டிலும், முன்னாள்; போராளிகள் தீவிர கண்காணிப்பிலும் இருக்கிறார்கள். அடக்குமுறை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இதனால் அடக்குமுறைதான் யுத்தத்திற்குக்காரணமென இளம் சந்ததியினரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். யுத்தம் முடிந்தபின் எங்களைத் தனியாக விட்டிருந்தாற்கூட நாங்கள் மன ஆறுதல் பெற்றிருக்கக்கூடும்.
நான் இப்போது ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டுடிருக்கிறேன். அதைவிட தனிப்பட்டவகையில் சமூக சேவையில் ஈடுபடுக்கின்றேன். பெரும்பாலும் இவ்வேலைகள் பெண்களின் உரிமைகள், குடியகல்வு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பானது. எனக்கு அதிகம் ஈடுபாடு இருப்பது வாழ்வாதார வேலைகள் தொடர்பில்த்தான். ஏனென்றால், தேவையுடைய பலர் இங்கேயிருக்கின்றார்கள்; பல உதவிகள் இருந்தாலும் அதைச் சரியானவர்களுக்கு கொண்டுபோய்ச்சேர்ப்பது குறைவு. அப்படி சரியான உதவி தேவைப்படுவோருக்கு உதவியைப் பெற்றுக்கொடுப்பது எனக்குத் திருப்தியை தருகிறது. பல பாதிப்புக்களிலிருந்து மீண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதென்பது மிகுந்த மன நிம்மதியைத் தருகின்றது.