நான் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு எனது சொந்த ஊரில் தொழில் புரிந்து எனது சொந்த வருமானத்தில் மனைவி குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றேன். சிறுவயதில் என் கண்முன்னே இராணுவத்தினர் எனது மாமாவினைச் சுட்டுக் கொன்றதனைக் கண்டு சிறுவயதிலேயே நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டேன். இயக்கத்தில் இணைந்து கொண்டு கனரகப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்ட நான் ஒரு படைத்தளத்திற்கு தளபதியாக இருந்தேன்.
2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகளுக்குப் பின்னர் காட்டிக்கொடுப்புகள் தலைதூக்கி இருந்தன. இப்பிளவிற்குப் பின்னர் எனது சொந்தப் பிரதேசமான கிழக்கு மாகாணத்திற்கு வந்து தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது குடும்பத்தில் அனைவரும் ஆண் சகோதரர்கள். ஒருவர் போராளியாகவிருந்து வீரச்சாவடைந்தார். இன்னுமொருவர் இன்னொரு போராட்டக்குழுவொன்றில் அங்கத்தவராகவிருந்தார். இந்த உட்பிளவுகளால் ஏற்பட்ட விளைவுகள் எனது குடும்பத்தினுள்ளும் தாக்கம் செலுத்தியமையால் மீண்டும் நான் வடக்கிற்குச் செல்ல வேண்டியேற்பட்டது.
2007 இறுதியில் முல்லைத்தீவில் இறுதியுத்தம் ஆரம்பித்த போது நான் ஆனந்தபுரத்தில் யுத்த களத்தில் இருந்தேன். நான் ஒரு படைக்குத் தளபதியாக இருந்ததினால் என் கீழ் இயங்கிய போராளிகளைக் காப்பாற்றுவதில் நான் குறியாக இருந்தேன். ஒருநாள், ஆனந்தபுரத்தில், நான் பொறுப்பாக இருந்த படைத்தளத்தினை இராணுவம் முற்றுகை இட்டது. இத்தாக்குதலில் காயமடைந்த போராளிகளின் உடல்களில் ஏற்பட்ட காயங்கள் தீப்பற்றி எரிந்த காயங்கள் போலவே இருந்தன. இக்காயங்கள் சாதாரண ஆயுதங்களின் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்கள் போல் தோற்றமளிக்கவில்லை. இவை நாங்கள் இதற்கு முன்னர் அறிந்திராத தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்ததன் விளைவு எனப் பின்னர் அறிந்து கொண்டோம்.
இறுதிக்கட்டப் போரில் போராளிகளின் இழப்பினைக் குறைப்பதற்காக, போராளிகள் வேறு மாவட்டங்களுக்கு பிரிந்து செல்ல வேண்டும் என்ற கட்டளைக்கிணங்க கிட்டத்தட்ட 35 போராளிகளுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர ஆரம்பித்தோம். நாங்கள் முள்ளியவளைப் புகுதியினூடாக நகர்ந்து கொண்டிருக்கும் போது வழியில் பல தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து போராளிகளையும் இழந்து கொண்டு வந்தோம். மாவிலாறுப் பகுதியினை வந்தடைந்த நிலையில் எம்மை வழிகாட்டி வந்த போராளி பாம்பு தீண்டி இறந்து விட்டார். அதன் பின்னர் நாம் வழி கண்டறிவதில் மிகுந்த சிரமத்துக்காளானோம். இறுதியில் இன்னொரு ஒட்டுக்குழுவைச் சந்தித்த நிலையில் அங்கும் இடம்பெற்ற தாக்குதலில் எங்களுடன் வந்த மீதிப் போரளிகளையும் இழந்து விட்டோம். ஆட்பலம், உடற்பலம் எல்லாம் இழந்த நாம் பின்வாங்கிய நிலையில் புணானை வழியாக ஓடிவந்து வெலிக்கந்தை பகுதியில் மீண்டும் இராணுவக் கட்டுப்பட்டுப் பகுதியில் சிக்கிக் கொண்டோம். அத்தருணத்தில் சடுதியாக இலங்கை செங்சிலுவைச் சங்கத்திற்குக் கிடைத்த அறிவிப்பைத் தொடர்ந்து செஞ்சிலுவைச்சங்கம் அவ்விடத்திற்கு உடனடியாக வந்தடைந்தது. எம்மைக் கைது செய்த அதிரடிப்படையினர் செஞ்சிலுவைச்சங்கம் முன்னிலையில் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தினர். இதன் பின்னர் மின்னேரியா இராணுப் பயிற்சி முகாமில் மூன்று நாட்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டோம். என்னுடன் மொத்தமாக 14 பேர் கைது செய்யப்பட்டோம். அதில் இருவர் பெண் போராளிகள் ஆவர். செஞ்சிலுவைச் சங்கத்தினர் வந்திருக்காவிடில் நான் இப்போது உயிருடன் இருந்திருப்பேனா தெரியாது.
மின்னேரியா இராணுவப் பயிற்சிப் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு சிஐடியினரால் விசாரணைக்குள்ளாக்கப்படடோம். அங்கிருந்து பின்னர் நான்காம் மாடிக்கு மேலதிக விசாரணைக்காக மாற்றப்பட்டோம். அங்கே, விசாரணை என்னும் பெயரில் கடும் சித்திரவதைக்கு உள்ளானோம். அங்கே விசாரணை செய்தவர்களில் சிலர் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகளுக்குப் பின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்கள். நான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அங்கே கிட்டத்தட்ட 800 பேர் வரை இருந்தார்கள். அவர்களில் 1992ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவரும் இருந்தார். அவரை நான் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து விடுதலையாகி வந்ததன் பின்னரும் சென்று பார்த்தேன்.
ஆறு மாதங்கள் நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்ட நான் பின்னர் எனது சகோதரரின் உதவியுடன் சட்டஉதவி பெற்று வறக்காப்பொல புனர்வாழ்வு நிலையத்திற்கு மாற்றப்பட்டேன். தற்போது நான் எனது ஊரில் வசித்தாலும் எனது பகுதியில் ஏதேனும் குற்றச் செயல்கள் நடந்தால் இராணுவத்தினர் என்னடம் விசாரணை செய்வர். அவ்வகையில் அண்மையில் எனது பகுதியில் இடம்பெற்ற குற்றச் சம்பவத்தினைத் தொடர்ந்து சிஐடீயினர் என்னை அழைத்துச் சென்று 15 நாட்கள் தடுத்துவைத்திருந்தனர். தடுத்துவைத்திருந்த அத்தனை நாட்களும் மது வெறியில் இருந்த அவர்கள் என்னை அடித்து சித்திரவதை செய்தனர். எனக்கு அப்போது இடம்பெற்ற சித்திரவதைகளின் விளைவுகள் இப்போதுதான் தெரிகின்றது. நான் சாரதித் தொழில் புரிகின்ற படியினால், தொடர்ச்சியாகத் தொழில் புரிவதில் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறேன்.
எவ்வாறிருப்பினும் புனர்வாழ்வு பெற்றவர் என்ற அடிப்படையில் இலங்கை அரசினால் எனக்கு கிடைக்கவிருந்த வீட்டுத் திட்டம் வாழ்வாதார திட்டம் போன்ற நிவாரண உதவிகள் எவற்றினையும் நான் பெறவில்லை. நான் எங்கு சென்றும் நிவாரணத்திற்காக எனது தகவல்களை வழங்கவும் இல்லை. இவ்விலங்கை அரசு வழங்கும் எதுவித நிவாரண உதவியுடனும் நான் வாழ விரும்பவில்லை. பலவித இன்னல்களைக் கடந்தும் எனது உழைப்பில் வாழ்வதே எனக்கு நிம்மதியை அளிக்கின்றது.