கனிமதியின் கதை

நாங்கள் பல உயிரிழப்புகளைக் கடந்து மனக்காயங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த பொதுமக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இன்னும் மக்கள் மத்தியில் சமூகம் சார்ந்த வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றேன்.

இறுதியுத்தம்! ஐயோ! அதனை என்னால் மறக்கவே முடியாது. எத்தனை விதமான குண்டுத் தாக்குதல்கள், ஷெல் குண்டுத் தாக்குதல்கள், கிபீர் குண்டுத் தாக்குதல்கள், கொத்துக் குண்டுத் தாக்குதல்கள், பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்கள் என இடைவிடாது தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களை பொதுமக்கள் மீது நிகழ்த்தியதனையும் அதில் மக்கள் உடல்கள் சிதறிப் பலியானதையும் மறக்க முடியுமா? இதை எல்லாம் மறந்துவிட்டு எம்மால் நல்லிணக்கம் தான் பேச முடியுமா?

நானும் எனது குடும்பமும் 2008 ஆம் ஆண்டு  எட்டாம் மாதமளவில் எமது ஊரில் இருந்து இடம்பெயரத் தொடங்கினோம். பரந்தன், விசுவமடு, உடையார்கட்டு என நாங்கள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த போது உடையார்கட்டில் தொடர்ச்சியான விமானக்குண்டுத்தாக்குதல் தொடரவே அங்கிருந்து  இருட்டுமடுவிற்குச் சென்றோம். இருட்டுமடுவில் ஏழுநாட்கள் தங்கியநிலையில் தேவிபுரம், புதுக்குடியிருப்பு என இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பில் 02 மாதங்கள் வரை தங்கியிருந்தோம். அங்கு தங்கிருந்த போது ஒருநாள் இரவு 09  மணியளவில் கொத்துக் குண்டுகள் விழுந்து வெடித்ததில் பல உயிர்கள் பங்கரினுள்ளேயே இறந்தன. கொத்துக் குண்டுகள் பற்றி முதன்முறையாக அங்கிருக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன். விமானத்தில் இருந்து ஒரு குண்டு விழுந்து வெடித்து மீண்டும் அது பல குண்டுகளாகப் பிரிந்து வெடித்து, விழுகின்ற இடங்களிலெல்லாம் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை.

புதுக்குடியிருப்புப் பகுதியில் இராணுவம் நெருங்கி விட அங்கிருந்து வலைஞர் மடத்திற்குச் சென்றோம். அங்கு ஓர் இரவு மூன்று குடும்பங்கள் ஒரு சிறிய பங்கரினுள் இருந்தோம். வழமை போல் அன்றும் இடைவிடாது குண்டுத் தாக்குதல்களை இலங்கை இராணுவம் நடத்திக் கொண்டிருந்தது. நான் தேநீர் தயாரிப்பதற்காக பங்கர் வாசலிற்கு வந்து பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது பங்கருக்கு அருகாமையில் குண்டு ஒன்று வெடித்துச் சிதறியதில் என் மீது  தண்ணீர் போன்ற திரவம் தெளிக்கப்பட்டதுபோல் இருந்தது. நான் திரும்பவும் பங்கரினுள் பாய்ந்து விட்டேன். ஆனால் எமக்கு அருகாமையில் மக்களின் அழுகுரல்கள் பெரிய சத்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

சற்று நேரத்தில் ஒரு வயோதிபர் கைகளில் இரத்தம் தோய்ந்த நிலையில் இரு குழந்தைகளை ஏந்தியபடி எம் பங்கரினுள் புகுந்தார். நாம் குழந்தைகளை வாங்கி இரத்தத்தினை எம்மிடம் இருந்த உடுதுணிகளால் துடைத்து சுத்தப்படுத்தினோம். அக்குண்டு வெடிப்பில் அவ்வயோதிபரின் மனைவி, மகன், மருமகள் என குடும்பத்தில் அனைவரும் இறந்துவிட்டார்கள்.  இவ்வேளையில் நான் அணிந்திருந்த சட்டை திடீரென சாம்பல் போல அரித்துக் கொட்டுவதனை அவதானித்த எனது அக்காவும் “என்ன பிள்ளை உன்ர சட்டை அரிச்சுக் கொட்டுது” என்று குழப்பத்துடன் கூறினார். நானும் எனது ஆடையைத் தொட்டுப் பார்த்த போது எனது சட்டை நூல் நூலாக அரித்துக் கொட்டியது. எனது உடலிலும் ஒருவகையான எரிச்சல் உண்டாவதை உணர்ந்தேன். எனது அக்காவின் கணவர் எனக்கு மாற்று உடை எடுப்பதற்காக கொடியில் இருந்த ஆடையினை எடுக்க முற்படும் போது கொடியில் இருந்த ஆடைகளும் சாம்பல் போல அரித்துக் கொட்டின. அப்போதுதான் இராணுவம் எம்மீது பொஸ்பரஸ் குண்டுகளை ஏவியுள்ளது என்பதனையும், அக்குண்டில்  இருந்து வெளிப்பட்ட ஏதோ ஒரு கூறுதான் என்மீது பட்டுள்ளது என்பதனையும் நாங்கள் தெரிந்து கொண்டோம்.

இடைவிடாது தொடர்ச்சியான தாக்குதலால் அவ்விடத்தில் இருந்தும் நாங்கள் நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெயர்ந்து முள்ளிவாய்காலுக்குச் சென்று கொண்டிருக்கையில், இடைவழியில் வலைஞர்மடம் வாசிகசாலைப் பகுதியில் ஒரு வீட்டில் பதினைந்து இருபது குடும்பங்கள் தங்கியிருந்ததனைக் கண்டோம். அங்கு கிணறும் பங்கரும் இருந்தபடியினால் நாங்களும் அவ்விடத்திலேயே தங்கிவிட்டோம். அங்கும் நான் கிட்டத்தட்ட 15 அல்லது 20 பேர் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒரேயடியாக இறந்ததைக் கண்டேன். பங்கரினுள் இருந்து வெளியில் வந்து சமைப்பதற்கு அரிசி கழுவிக் கொண்டிருந்தவர்களும், அடுப்பில் இருந்து  கறியை இறக்கி வைக்க வந்தவர்களுமென அந்தந்த இடங்களில் அப்பாவிப் பெண்கள் இறந்து கிடந்தது என் மனக்கண் முன் இப்போதுகூட அப்படியே இருக்கிறது. இராணுவம் முன்னேறிக் கொண்டு இருந்ததினால் நாங்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்தோம்.

அங்கு ஒன்றரை மாதமளவில் தங்கியிருக்கும் போது எனது மகன் முறையிலான ஒரு பையனின் மனைவியின் பிரசவத்திற்காக என்னை அவர்களுடன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு உதவிக்கு வரும்படி  அழைத்தனர். நானும் அவர்களுடன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்றேன். வைத்தியசாலையில் குழந்தை கிடைத்தவுடன் குழந்தை மீதுள்ள இரத்தத்தைக் கூடத் துடைக்காமல் என்னிடம் குழந்தையை உடனே தந்தார்கள். நான் குழந்தையை ஒரு துணியினால் சுற்றிக் கொண்டிருக்கும் போது எனக்கு மிக அருகாமையில் செல் விழுந்து வெடித்ததில் நானும் குழந்தையும் தூக்கி எறியப்பட்டோம். நான் குழந்தையை என் வயிற்றுப் பகுதியில் அணைத்தபடி குப்புற விழுந்து குழந்தையை பாதுகாத்துக் கொண்டேன். நான் எழுந்து பார்க்கும் போது ஒரு வயோதிபர் தனது வயிற்றிலிருந்து தொங்கும் குடலினை கையில் தூக்கி வைத்துக் கொண்டு வைத்திய உதவிக்காக கதறிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எவ்வாறு வைத்தியம் செய்வது? இடைவிடாத குண்டுத்தாக்குதல் வைத்தியசாலை மீதும் இடம்பெற்றுக் கொண்டிருந்ததினால் தாதியர்கள் அனைவரும் பங்கரினுள் இருந்தனர். இதனால் அவ்வயோதிபருக்கு உதவ அவர்களால் முடியவில்லை. வைத்தியசாலை முன்றலில் ஒரு தறப்பாழின் மீதே காயப்பட்டவர்கள் அனைவரையும் கிடத்தியிருந்தனர். அன்று நான் பார்க்கும் போது கிட்டத்தட்ட ஐநூறிற்கும் அதிகமான காயப்பட்டவர்கள் அங்கிருந்தனர். பாதுகாப்பு வலயம் என்று இலங்கை அரசு அறிவித்த இடங்களில் கூட குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. ஒருநாள் முள்ளிவாய்க்கால் ஒற்றைப்பனைமரத்தடியின் கீழ் TRO  நிறுவனம் கஞ்சி வழங்கிக்கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கான மக்கள் அதனைப் பெறுவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் மீது வீசிய செல்குண்டு வீச்சில் அவ்விடத்திலேயே குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என கையில் பாத்திரங்களை ஏந்தியபடி உடல் சிதறி இறந்த அவலத்தை என்னால் மறக்கவே முடியாது.

எனது கணவர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்ருந்தார். அவரை அந்நிறுவனம் அழைத்தபடியினால்  அவர் அந்நிறுவனம் இருந்த இடத்திற்குச் சென்றுவிட்டார். கணவருடன் கிழமைக்கு ஒரு தடவைதான் தொடர்பு கொள்ள முடியும், ஒவ்வொரு கிழமையும் நான் அவருடன் பேசுவதற்காகச் செல்லும் போது பிணங்களை மிதித்து, காயப்பட்டவர்களைக் கடந்தே செல்வேன். ஒவ்வொரு நாளும், கொத்துக் குண்டுகளும், பொஸ்பரஸ் குண்டுகளும், கிபிர் குண்டுகளுமெனத் தொடர்ச்சியாகக் குண்டுகள் விழுந்து கொண்டே இருக்கும். 15.05.2009 அன்று இராணுவம் மிகவும் அருகாமையில் நெருங்கிவிட்டது. இரவு 11.00 மணியிருக்கும் “அம்மாக்கள் இராணுவம் வந்தால் நீங்கள் போங்கோ, நாங்கள் இனி இங்க சண்டை பிடிக்க மாட்டோம், பின்வாங்கப் போறம், போறாக்கள் போங்கோ” என விடுதலைப் புலிகள் பங்கர்கள் அருகே வந்து அறிவித்தனர்.

அன்று அதிகாலை 3.30 மணியளவில் இராணுவம் அப்பகுதியைச் சுற்றி வளைத்தது. அவர்கள் சிங்களத்தில் பேசியது மிகவும் அருகாமையில் பங்கரினுள் இருந்த எமக்குக் கேட்டது. எங்களை பங்கர்களை விட்டு வெளியில் வரும்படி அறிவித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் இராணுவத்தின் காட்டிய பக்கம் செல்வதற்காக பள்ளங்களிலும் முட்களிலும் விழுந்து எழும்பிச் சென்று கொண்டிருந்தோம். எம்மை சிவன் கோயிலுக் கருகாமையிலிருந்த பனைமரக் கூடலுக்கருகில் ஒன்று திரட்டி நிறுத்தி வைத்திருந்தனர். அங்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேருக்கு மேற்பட்ட மக்கள் இருந்தனர். எமக்கு பிஸ்கட்டும் தண்ணீர் போத்தலும் தந்து பஸ்களில் ஏற்றி இரட்டைவாய்க்காலிற்கு கொண்டு சென்றனர்.

இரட்டைவாய்க்காலிற் தான் எம்மை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இயங்கியவர்கள், அவர்களுடன் பணியாற்றிவர்கள், பொதுமக்கள் எனத் தரம் பிரித்தனர். அவ்விடத்தில் பச்சை நிறங்களிலான முகாம்கள் காணப்பட்டன. அம்முகாம்களிலிருந்து பெண்பிள்ளைகளின் குளறல் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. “அம்மா காப்பாத்துங்கோ, அண்ணா காப்பாத்துங்கோ, இங்க என்ன நடக்குது எண்டு உங்களுக்குத் தெரியேலயா, யாராவது காப்பாத்துங்கோ” என்ற ஓலங்கள் இதுவரைக்கும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நான், எனது பிள்ளைகள், அக்கா, அவரின் கணவர், பிள்ளைகள் என அவ்விடத்தில் மாலை 6.00 மணிவரைக்கும் வரிசையில் நின்றிருப்போம். அதுவரைககும் பெண் பிள்ளைகளின் அழுகுரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு இராணுவமும் அந்த முகாமுக்குள் சென்று வரும் போது அதற்கு வெளியே நிற்கும் ஏனைய இராணுவத்தினர் அவர்களின் தோள்களைத் தட்டிக்கொடுத்தும் கைகுலுக்கியும் சிரித்ததனை எவ்வாறு மறக்க முடியும்! பெண்பிள்ளைகளின் பெற்றோர்கள் முகாம்களுக்கு வெளியில் இருந்து அழுது கொண்டிருந்தது சொல்லொணாத வேதனையாக இருந்தது.

நான் அவ்வரிசையில் நிற்கும்போது ஒரு கைப்பை மாத்திரமே வைத்திருந்தேன். அதில் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் இரண்டு தங்கச்சங்கிலிகளும் இருந்தன. இராணுவம் எனது பையை வாங்கிப் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போது, எனது கவனம் வேறெங்கேயோ சிதறியிருந்தது. எனது அக்காவின் மகன் “சித்தி உங்கள் பையினுள் இருந்து ஆமிக்காரன் காசை அள்ளி எடுக்கிறான்” என்று கூறினார். நான் திரும்பிப் பார்க்கும் போது காசையும் ஒரு தங்கச்சங்கிலியையும் அவனது காற்சட்டைப் பையினுள் திணித்துக் கொண்டிருந்தான். எனது அக்காவின் கணவர் அவனிடம் “ மாத்தயா, சேர் சல்லி” என்று தனக்குத் தெரிந்த சிங்களத்தில் கேட்க எத்தனித்த போது அவன் துவக்கின் பிடியினால் அவரை அடிப்பதற்குக் ஓங்கினான். அந்தப் பயத்தில் நாங்கள் அதைப்பற்றி எதுவும் கேட்க்காமலே வெளியேறினோம். இவ்வாறான சோதனைகளின் போது பலரின் பணங்களையும் நகைகளையும் இராணுவம் எடுத்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து எம்மை பஸ்களில் ஓமந்தைக்கு ஏற்றினர். அங்கொரு பள்ளிக்கூடம் அருகில் மீண்டும் விசாரணை செய்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இயங்கியவர்கள், உதவி செய்தவர்கள், பணியாற்றிவர்கள் என மீண்டும் தரம் பிரித்து விசாரணைகள் நடந்துகொண்டிருந்தன.  இயக்கத்தில் இயங்கிய போராளிகள் அனைவரையும் புகைப்பபடம் எடுத்துவிட்டு அனுப்புவதாகக் கூறி தாண்டிக்குளம் அருகே அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் நாம் நின்றவரை திரும்பி வரவில்லை. எம்மை ஓமந்தையில் இருந்து பஸ்களில் இராமநாதன் முகாமிற்கு அனுப்பினர். ஒரு நரகத்தில் இருந்து உயிர் தப்பி வந்த நாங்கள் மீண்டும் இன்னொருவிதமான நரக வாழ்க்கையினை அனுபவித்தோம். குண்டுச் சத்தங்கள் இல்லை. ஆனால் ஆயிரக் கணக்கான மக்கள் ஒரு சிறிய இடத்தில் தங்க வைக்கப்பட்ட போது, மனித மலங்கள் கால்களிலும் கைகளிலும் மிதிபடக் கடந்து சென்ற துயரத்தை எம்மால் மறக்கவேமுடியாது. இவ்வாறான இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுத்து 2010 ஆம் ஆண்டளவில் எம்மை எமது ஊரில் மீள்குடியேறினோம்.

இவ்வவலங்களைக் கடந்து தற்போது பதினைந்து வருடங்கள் ஆனாலும், அவைகள் இன்றைக்கும் என் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. நல்லிணக்கம்  எனும் பெயரில் பல பயிற்சிப் பட்டறைகளில், மறக்க வேண்டும் மன்னிக்க வேண்டும் எனக் கூறுவார்கள். ஆனால் நாங்கள் நேரே கண்ட காட்சிகள், அவலங்கள், இறப்புகள் – இவற்றினை எம்மால் எளிதில் மறக்க முடியாது. இறக்கும் வரைக்கும் இந்த நினைவுகள் எம்மைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் இதற்கான தீர்வுகள் எப்போதாவது கிடைத்துத்தான் ஆகவேண்டும். நான் தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மட்டும் தான் தொடர்ந்தும் பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். எமக்கு கிடைக்காவிடினும் எமது எதிர்காலச் சந்ததியினருக்குக் கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்ற ஓர்மத்தில் தான் நான் தொடர்ந்தும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.