கந்தசாமியின் கதை

நான் சிறுவயதிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கிறேன். எனது குடும்பத்தில் 6 அங்கத்தவர்கள். அதில் ஒரு சகோதரன் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார். ஏனையவர்கள் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் இருக்கிறார்கள். எனக்கு தற்போது 52 வயதாகிறது. எனது சிறுபராயத்திலிருந்து இன்றுவரை பல இழப்புக்களைக் கடந்து வந்திருக்கிறேன். எனது சிறுவயதுப் பிராயமே எனக்கு மிகவும் சந்தோசமான நினைவுகளை தந்திருக்கிறது. அதில் மிகவும் குறிப்பிட்டுக் கூறக்கூடியது பாடசாலைக் காலத்தையே. என்னுடன் கல்வி கற்றவர்களில் சிலர் யுத்தத்தில் இறந்துவிட்டார்கள், சிலர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள், மற்றும் சிலர் உள்நாட்டில் வசிக்கிறார்கள். சிலர் நோய்களினால் பாதிக்கப்பட்டும், நடக்கமுடியாமலும் இருக்கின்றனர்.

எனக்கு 12 வயதாயிருக்கும் போது விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது நாங்கள் முல்லைத்தீவை அண்டிய சிறு கிராமத்தில் வசித்து வந்தோம். அது காட்டுப் பிரதேசமாக இருந்ததால் அங்கே இரு தரப்பினரும் மாறி மாறி துப்பாக்கி சூடு நடத்துவார்கள். எமது கிராமம் மிகவும் செழிப்பு நிறைந்ததாக இருந்ததால் அதிக பண்ணைகள் இருந்த ஒரு கிராமமாக இருந்தது. ஆடு, மாடு, கோழிப்பண்ணைகள் மட்டுமன்றி 100 அல்லது 200 ஏக்கர் காணிகளில் முதலாளிமார் உழுந்து போன்ற தானியங்களையும் பயிரிடுவர். 1982 மற்றும் 1983 ஆண்டு காலப்பகுதிகளின்போது தமிழ் மக்களின் பண்ணைகள் யாவும் அருகிலிருந்த சிங்களவராற் சூறையாடப்பட்டது. பண்ணைகளில் உள்ள மிருகங்களும், பொருட்களும் சூறையாடப்பட்டதுடன், அதைத் தடுக்கச்சென்றவர்கள் தாக்குதலுக்கும் உள்ளானார்கள். இந்நிலை தொடரவே பயம் காரணமாக மக்கள் அவ்விடம் விட்டு வேறு இடங்களுக்குச் செல்லவேண்டி இருந்தது.

1983ம் ஆண்டு கலவரம் நடந்த காலப்பகுதியில் நாம் இருந்த கிராமத்தில் விடுதலைப் புலிகள் இருப்பதாகவும், அவர்களை பிடிப்பதாகவும் கூறி இராணுவம் வாகனங்களில் ஒருநாளிலேயே பலதடவைகள் ரோந்து செல்ல ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து சிறிது சிறிதாகச் சிங்களக் குடியேற்றங்கள் எனது கிராமத்தை ஊடுருவ ஆரம்பித்தன. 1984ல் இராணுவத்தினரையும், இடையில் குடியேறிய சிங்களவர்களையும் விரட்டுவதற்கான தாக்குதல் ஒன்று நடைபெற்றது. கோபத்திலிருந்த வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் இச்சம்பவம் நடந்து மூன்றாவது நாளில் எமது கிராமத்துக்கு அதிகாலையில் வந்து வீடு வீடாகச் சென்று அப்பாவிகளான 32 பேரைப் பிடித்தார்கள். அதில் 27பேரினுடைய கைகள் கட்டப்பட்டு கிராமத்திலிருந்த ஒரு நெசவுச்சாலையின் பின்னால் கொண்டு செல்லப்பட்டனர். அவ் இருபத்தேழு பேரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கியாற் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அதில் எனது அப்பாவும் ஒருவர். இளமையானவர்கள் இவ்வாறு கொல்லப்பட்ட நிலையில் மீதியிருந்த ஐவரும் மிகவும் வயதான, தடியூன்றி நடக்கும் நிலையில் இருந்தவர்கள். கைகள் கட்டப்பட்டிருந்த இவ் ஐவரும் உழவு இயந்திரம் ஒன்றின் பெட்டியைத் திறந்து அதனுள்ளே வீசப்பட்டனர். பெட்டியின் கதவுகள் அவ் ஐவர் மீதும் போடப்பட்டு அதன்மேல் இராணுவம் நின்றவாறே உளவு இயந்திரத்தைக் கிராம எல்லைக்குக் கொண்டு சென்றனர். அந்த உளவு இயந்திரம் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் உள்ளேயிருந்த வயோதிபர்களுடன் உளவு இயந்திரத்தின் பெட்டி முழுவதுமாக எரியூட்டப்பட்ட நிலையிற் கண்டெடுக்கப்பட்டது.

இந்தப் படுகொலைச் சம்பவத்தின்பின் எமது கிராமத்தை ஒட்டியுள்ள மற்றைய எல்லைக்கிராமங்களிலுமிருந்த பெரும்பாலான மக்கள் பயத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சென்றார்கள். கொலை, கொள்ளை சூறையாடுதல், எமது குடும்பத்துப் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தலென தொடர்ந்துகொண்டிருந்த வன்முறைகளே எமது உரிமைகளுக்காகப் போராடுவதே ஒரேஒரு வழியென்ற உணர்வினைத் தூண்டியது. எமது கல்வியையோ, தொழில்களையோ முறையாகத் தொடரமுடியாதபடி போராட்டந்தான் ஒரே வழி என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

1986ம் ஆண்டு இந்திய இராணுவப் பிரச்சினை, 1992ம் ஆண்டு மறுபடியும் இலங்கை இராணுவப் பிரச்சினை, 1996ம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையெனப் பிரச்சினைகள் தொடரவே  நெடுங்கேணி, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, துணுக்காய் மற்றும் வவுனியா மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், மற்றும் மன்னார் மாவட்டம் என எமது கிராமத்திலிருந்து எமது ஒவ்வொரு இடங்களாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். இடம் பெயரும் போது வீட்டிலுள்ள பொருள் பண்டங்களையோ பணத்தையோ அல்லது நகைகளையோ எடுக்காமல் அத்தியாவசியமான பொருட்களடங்கிய பொலித்தீன் பைகளோடையே இடம்பெயர்ந்தோம். கடைசியாக 2009ல் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால், மாத்தளன், சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு என படிப்படியாக இடம்பெயர்ந்துகொண்டிருக்கும்போது எறிகணைவீச்சுக்கள் நிகழ்ந்துகொண்டேயிருந்தது. போரின் இறுதி கட்டங்களில் நாங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து கட்டம் கட்டமாக ஒரு கிலோ மீற்றர் அல்லது இரண்டு கிலோ மீற்றர் தூரமே இடம்பெயர்ந்துகொண்டிருந்தோம். சண்டை எப்படி எங்கே நடக்கிறதோ அதற்கேற்ப எங்கள் இடப்பெயர்வும் இருந்தது.

நான் 2009 பெப்ரவரி மாதம் எறிகணை வீச்சினால் காயமடையவே எனது குடும்பத்தினரும் உறவினர்களும் இடம்பெயரும்போதும் என்னையும் தூக்கிச் சுமந்தனர். நாங்கள் இடம்பெயர்ந்து ஒரு இடத்தில் ஒரு பதுங்குகுழியை வெட்டி பாதுகாப்பாக இருந்தபோது கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து 6 அல்லது 7 குடும்பங்கள் சிறுபிள்ளைகள் சகிதம் எமது இருப்பிடத்திற்கருகில் வந்திருந்தனர். நாங்கள் அமைத்திருந்த பதுங்குகுழியில் 10 பேர் வரை பாதுகாப்பாக இருக்க முடியும். நானும் எனது மனைவியும் எனது பிள்ளையும் அதில் பாதுகாப்பாக இருந்தோம். ஆனால் சிறு பிள்ளைகளுடன் இருந்த ஒரு தாயார் வெளியே நின்றிருந்தபோது நான் அவர்களை பாதுகாப்பாக இருக்க நாம் இருந்த பதுங்குகுழிக்குள் வர அழைத்தோம். அவர் சிறுபிள்ளைகளுடன் எமது பதுங்குகுழியினுள் ஒதுங்கியபோது அங்கு இடம்போதாமலிருந்தது. நான் அப்பதுங்குகுழியினுள் இடம் போதாமையால் ஓர் ஓரமாக ஒதுங்கியபோதே எறிகணைவீச்சுக்கு இலக்கானேன். அன்று நான் பதுங்குகுழியைப் பகிர்ந்திருக்காவிட்டால் காயமடையாமல் தப்பியிருந்திருப்பேன். ஆனால் பல சிறுபிள்ளைகள் அங்கு இறந்திருப்பார்கள். அதனால் நான் காயப்பட்டதை நினைத்தோ அல்லது எனது மிகுதி வாழ்நாட்களைச் சக்கர நாற்காலியிற் கழிப்பது குறித்தோ வருத்தமடைவதில்லை. ஒருவேளை கவலை ஏற்பட்டால் அந்த 10 சிறுபிள்ளைகளை நினைத்துக்கொள்வேன்.

மருந்து மற்றும் மருத்துவ வசதிகள் மிகவும் அங்கு குறைவாகவே இருந்தன. மருத்துவப் போராளிகளும் அரச வைத்தியர்களும் காயமடைந்தவர்களுக்கு மருந்து தட்டுப்பாட்டின் மத்தியிலும் சிகிச்சையளித்தனர்.   எறிகணைத் தாக்குதல் ஒன்று நடைபெற்றால் அந்த இடத்திற்கு மருத்துவப்போராளிகள் விரைந்துவந்து காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதுடன் இறந்தவர்களின் சடலங்களை அகற்றியும், அடக்கம் செய்தும் தமது தமது பணிகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றினர். சேலைன் என்ற மருந்தை தவிர வேறு மருந்துகள் இறுதி யுத்தத்தின்போது இருக்கவில்லை. காயத்திற்கு கட்டுவதற்கு கோஸ் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக நிறத்துணியை துண்டு துண்டுகளாக வெட்டி, தோய்த்து, அவித்து காய வைத்து கோஸாக  பயன்படுத்தினர். சத்திரசிகிச்சைக்கூடங்கள் அங்கு காணப்படவில்லை. மரநிழலே சத்திரசிகிச்சைக்கூடமாக பயன்படுத்தப்பட்டது. இறுதியுத்தத்தின்போதான போராளிகள், மருத்துவப் போராளிகள் அரச வைத்தியர்களின் சேவை அளப்பரியது.

போரின் இறுதிநாட்களில் துப்பாக்கிச் துப்பாக்கிச்சன்னங்கள், எறிகணை வீச்சுக்களினால் மட்டுமல்லாது உணவுப்பஞ்சத்தினாலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. கொத்துக்குண்டுகளின் தாக்கத்தை நாம் அதிகம் அங்கேயே அனுபவித்தோம். உடைமைகளின் இழப்பைக்காட்டிலும் உணவுப்பஞ்சமே மிகப்பெரிய நெருக்கடியாக இருந்தது. ஏனெனில் ஒரு கிலோ அரிசியின் விலை 5000 ரூபாவுக்கும் ஒரு தேங்காய் 5000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. அவற்றை வாங்கினாலும் உயிருடன் வீடு சென்றடையும் உத்தரவாதம் இல்லாதிருந்தது. வெளியில் கடைக்குச் சென்ற பலர் திரும்பி வரவில்லை. வீட்டில் உணவுப்பொருட்களை எடுக்கச் சென்றவர்கள் மீண்டும் திரும்பவில்லை. விறகு பொறுக்கச் சென்றவர்கள் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. தண்ணீர் எடுக்க சென்றவர்கள் மீளவில்லை. எறிகணையின் தாங்குதல் அந்தளவிற்கு பயங்கரமாகவிருந்தது.

யுத்தம் நிறைவடைந்து 3 அல்லது 4 நாட்களின் பின்பு கூட்டம் கூட்டமாக இருந்த மக்கள் இராணுவத்தினர் இருக்கும் இடங்களை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு அவற்றை நோக்கி 50 பேராக அல்லது அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் இராணுவக் கட்டுப்பாட்டு வலயங்களுக்குள் கட்டம் கட்டமாகப் பிரவேசித்தனர். 2 அல்லது 3 மணித்தியால இடைவெளிகளில் மக்கள் சூனியப் பிரதேசங்களிலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். 1000 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் செல்லும்போது அதில் 750 பேரே அவர்களது கட்டுப்பாட்டுக்குள் உயிருடன் சென்றனர், மிகுதியானவர்கள் சுடப்பட்டு இறந்தனர். பின்பு முகாம்களுக்குள் இராணுவத்தினர் எங்களைத் தடுத்து வைத்தனர். 2 அல்லது 3 குடும்பங்களை ஒரு தறப்பாளின் கீழ் தங்கவைத்தனர். படிப்படியாக எமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டோம். போருக்கு முன்னர், குறைந்த வருமானத்தை ஈட்டினாலும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வாழ்ந்தோம். இப்போது நான் சொந்தமாகக் கூலிக்கு ஆட்களை அமர்த்தி தொழில் செய்தாலும் வாழ்க்கைச் செலவை கொண்டு நடத்தக் கூடியவாறான நிலைமைகளோ அல்லது முன்னரிருந்த சுதந்திரமோ கொஞ்சம் கூட இப்போது இல்லை.