கோதையின் கதை

முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையில்  இறந்த   கர்ப்பிணித் தாய்மார்களின், குழந்தைகளின், வயது போனவர்களின் உயிர்கள்தான் தற்போதும் என்னை காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களைத்  தேடும் போராட்டங்களில் ஈடுபட வைத்துக் கொண்டிருக்கின்றன.

நான் களைத்து, சலித்து, சோர்ந்து போய் போராட்டங்களைக் கைவிட நினைத்தாலும் முள்ளிவாய்க்காலில் இறந்த உயிர்கள் “ஐயோ போறீயளோ எங்களை விட்டிட்டு, என்ன எங்களை மறந்து விட்டீர்களா? எங்கள்; இரத்தம் காய்ந்து போய்விட்டதா? எங்கள் இரத்தத்தை பார்த்தும் கைவிட்டுத்தானே இருக்கின்றீர்கள்?; சோர்ந்து விட்டீர்களா? நீங்கள் சோர்ந்து போய்விடக் கூடாது, இனிமேல் எங்கட இனத்திற்கு இது நடக்க கூடாது, எமது இனம் அழியக் கூடாது” என என் கண்முன்னே வந்து கூறுவது போல், கேட்பது போல் இருக்கின்றது. இந்த உணர்வுகளே தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் போராட்டங்களில் என்னை ஈடுபட வைத்துக் கொண்டிருக்கின்றன.

நானும் எனது கணவரும் எமது இரண்டு வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தப்பிப் பிழைத்து ஓடி வரும் போதெல்லாம் காயப்பட்டு குற்றுயிராக விழுந்து கிடந்தவர்கள் எமது காலைப் பிடித்து “என்னையும் தூக்கிட்டு போவன்” என்று மன்றாடும் போதெல்லாம், நாமே அரை உயிரில் ஓடி வரும் போது அவர்களையும் தூக்கிக் கொண்டு எப்படி ஓடுவது என்று மறுத்துவிட்டு எமது உயிரைப் பாதுகாக்க ஓடியதை எப்படி மறக்க முடியும்?

நான் தற்போதும் முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் சந்தர்ப்பங்களிலும் கூட எனது நினைவுகள் அனைத்தும் “எத்தனை சீவன்கள் இந்த இடத்தில் பறிபோயிருக்கின்றன” என்பதைத்தான் கூறும்.  அங்கு சென்று நாம் இருந்த இடங்களைப் பார்க்கும் போதெல்லாம் அங்கிருந்த மக்கள் கையை காட்டுவது போன்றும், கண்களை சிமிட்டுவது போன்றும், படுத்திருப்பது போன்றும், கதறி  அழுவது போன்றும், ஓடுவது போன்றும் என் மனக்கண் முன்னே தெரிகின்றன. என் கனவுகளிலும் கூட இன்றுவரைக்கும் குண்டு விழுவது போன்றும் இறப்பது போன்றும் ஓடுவது போன்றும் நினைவுகள் வந்து கொண்டிருக்கின்றன. எத்தனை வருடங்கள் கடந்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்னால் மறக்க முடியாது.

இறுதித் தருணங்களில் கட்டடங்கள் மரங்கள் எதுவுமே இல்லாத, முழு வெயில் விழும் பரந்து பட்ட முள்ளிவாய்க்காலில் அந்த வெட்டைவெளியில் இருக்கும் போது, எங்களுக்கு வெயில் தெரியவே இல்லை. வெயிலில் படுத்தோம் வெயிலில் நடந்தோம் வெயிலில் உயிரைப் பிடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த வெயில் படர்ந்த வெட்டை வெளிதான் இராணுவத்திற்கு எம்மை கொல்லுவதற்கும் எளிதாக இருந்தது.
“மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும், இருக்கும் இடங்களில் வெள்ளைக் கொடி குத்தி இருங்கள்” என இராணுவம் அறிவித்ததை நம்பி, முள்ளிவாய்க்கால் வெட்டைவெளியில் அடைக்கலம் புகுந்து வெள்ளைக் கொடியுடன் இருந்த எம்மீது கிபீர் தாக்குதல் செய்தார்கள், செல் அடித்தார்கள், கொத்துக் குண்டு போட்டார்கள்.

அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவரும் போது எனது கால்களில் மிதிபட்ட பிணங்கள், காயப்பட்டுக் குற்றுயிராகக் கிடந்தவர்கள் அவர்களைக் கண்டும் காணாமல் ஓடி வந்த நினைவுகள் அந்த இடத்திற்கு செல்லும் போதெல்லாம் என் கண்முன்னே வருகின்றன.

அந்த இடத்தில் இருந்து  மண்ணை கைகளில் அள்ளி மணந்து பார்த்தால் இறந்த பிணங்கள் மணப்பதைப் போல்தான் எனக்கு இப்போதும் இருக்கின்றது. அந்த அளவிற்கு அந்த இடத்தில் இரத்தம் தோய்ந்த நிலையில் பிணங்கள் கிடந்தன. இவற்றினை எப்படி மறக்க முடியும்?

14ம், 15ம், 16ம் திகதிகளில் அகோர இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை எனது குழந்தை வயிற்றுப் பெருக்கால் பாதிக்கப்பட்டிருந்தது. அவரிற்கு சிறிதளவு சுடுதண்ணீர் பருக்குவதற்காக,  உடைந்த பானை ஒன்றை தேடியெடுத்து அதில் தண்ணீர் கொதிக்க வைக்க வெளியில் வந்த வேளை எனது வயிற்றில் செல் காயம் பட்டு வயிற்றினுள் செல் துண்டு சென்றுவிட்டது. நான் இறந்து விடுவேன் என நினைத்து எனது கணவர் என்னைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் எம்மைக் கொண்டு செல்வதற்குக் கப்பல்கள் எதுவும் வரவில்லை, எனது காயத்தில் இருந்து துர்நாற்றமும் வீசத் தொடங்கியது, என்னால் மூச்செடுக்கவும் முடியவில்லை இதனால்; 16ம் திகதி நானும் கணவரும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரத்தில் இருந்து புறப்பட்டுவிட்டோம்.

வட்டுவாகலிற்கும் முள்ளிவாய்க்காலிற்கும் இடைப்பட்ட எல்லைக்கு 17ம் திகதி வந்தடைந்த போது, அந்த எல்லையிலுள்ள கடலினைத் தாண்டியே வட்டுவாகலுக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது அங்கு இப்போதிருப்பதைப் போல பாலம் கட்டப்பட்டிருக்கவில்லை. கடலினைக் கடந்து தான் மக்கள் செல்ல வேண்டியிருந்தது. பலர் அதனைக் கடந்து செல்ல முற்பட்டவேளை இராணுவத்தினரின் செல் தாக்குதலில் இறந்து அவர்களின் பிணங்கள் கடலில் மிதந்து கொண்டிருந்தன.

அதில் அதிகமானோர் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்தவர்கள், யாழ்ப்பாணத்திற்கு இவ்வழியால் தப்பி ஓடலாம் என்று எண்ணி வாகனத்தில் வந்த மக்களைக் குறிவைத்துச் செல்தாக்குதல் நடாத்தியதில் பலர் அதில் கொல்லப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரின் பிணங்களும் குந்தி இருந்த நிலையில், கையைக் கூப்பிய நிலையில், கையைத் தூக்கிய நிலையில் என்று ஒவ்வொரு நிலையில் இருந்தன. அதில் இளைஞர்கள், யுவதிகள், கர்ப்பிணித்தாய்மார்கள், கிழவர்கள், கிழவிகள், மதகுரு ஒருவர் என கிட்டத்தட்ட 300 பேர் அளவில் கொல்லப்பட்டிருந்தனர்.

இவர்களின் பிணங்களை மிதித்து, கடந்து கடல் வழியாக வட்டுவாகலுக்கு வந்தடையும் போது எனக்குத் தண்ணீர் தாகம் தாங்க முடியாமல் கடல் நீரை அள்ளி நானும் பருகி எனது குழந்தைக்கும் கொடுத்தேன். நான் இடைவழியில் இரத்தம் கலந்த கடல் நீரையே பருகியுள்ளேன் என்பதனை இராணுவம் வட்டுவாகலுக்கு வந்தடைந்த போது அவர்கள் வழங்கிய தண்ணீர் நிறமற்றிருந்த போதே, நான் எமது உறவுகளின் இரத்தம் கலந்த நீரையே பருகியுள்ளேன் என்பதனை உணர்ந்தேன்.

வட்டுவாகலுக்கு வந்தடைந்த போது, எனது கணவரின் பெயரைக் கூறி, அவரை வந்து சரணடையும் படி இராணுவம் கத்தியது. அவரோ  என்னை வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னர் வந்து சரணடைகின்றேன்  என்று இராணுவத்தினரிடம் மன்றாடினார். இராணுவம் தொடர்ந்து அவரைத் தாக்கிய படி இருந்ததால் நான் அவரைப் போய் சரணடையும்படி கூறினேன். அதற்கு அவர் “இல்லை நீயும் பிழைக்க வேண்டும், நானும் ஜெயிலுக்குப் போனால் பிள்ளையை யார் பார்ப்பது”  என்று கூறியபடி, இராணுவத்திடம் “சேர் பிளீஸ், சேர் பிளீஸ், சேர் அவக்கு துவால சேர்” என்று தனக்குத் தெரிந்த சிங்களத்திலும்; கெஞ்சியபடியே அடியையும் வாங்கிக் கொண்டு என்னை மன்னார் வைத்தியசாலைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். இதனையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது.

நான் பஸ் யன்னலால் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் இராணுவம் அவருக்கு அடித்துக் கொண்டிருந்தது. நான் பதட்டத்தில் “என்ன என்ன” என்று கேட்கும் போது, “நீ தனியாக என்ன செய்யப் போகிறாயோ தெரியாது. குழந்தையைக் கவனமாகப் பார்த்துக் கொள். பத்து வருடங்கள் கடந்தாலும் நான் திரும்பி வருவேன், சரணடையத்தானே சொல்கிறார்கள், இலங்கை அரசாங்கம் எப்படியும் நம்மை விட்டுவிடும் நான் வருவேன்” என்று கத்தியதை என்னால் இப்பவும் மறக்க முடியாது.

2009.05.17 அன்று காலை 09.00 மணிக்கு இலங்கை இராணுவத்திடம் எனது கணவர் சரணடைந்த போது, அவரை சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சிறப்பு நிற பஸ்ஸில்  ஓமந்தைப் பக்கம் கொண்டு சென்றதனை நான் எப்படி மறப்பேன்? மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் நினைவுகளே தற்போது வரைக்கும் எனது கணவருடன் சேர்ந்து காணாமல் ஆக்கப்பட்ட எனது ஏனைய உறவுகளுக்காகவும் நீதி கேட்டு போராடுவதற்குப் பல வழிகளிலும் உந்துசக்தியாக இருக்கின்றன.

நாம் கேட்கும் நீதியும் நியாயமான கோரிக்கைகளும் எப்போதாவது ஒருநாள் நிறைவேற்றப்பட்டாலும் கூட முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்டு வந்த இறுதி நாட்களின் எமது நினைவுகளை மறப்போமா? என்பது சந்தேகமே.