திவாகரின் கதை

நான் போர்ச்சூழலிலேயே பிறந்து வளர்ந்தேன். எனது சிறுவயது காலங்கள், பள்ளி வாழ்க்கை எல்லாம் போரை மையமாக வைத்தே இருந்தன. எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் பார்த்து வளர்ந்த சூழல் சண்டைகளும், குண்டுத் தாக்குதல்களும், உயிரைப் பாதுகாக்க பங்கரில் பதுங்குவதுமாகவே இருந்தது. இந்த வாழ்வியல் அனுபவங்களே 2009ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதியுத்தத்தின் போது  எமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உறுதுணையாக அமைந்தன. நான் பிறந்து வளர்ந்த ஊரில் அடிக்கடி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதால்,  கல்வி பயிலும் பாடசாலைகளின் மீதும் குண்டுகள் விழும் சந்தர்ப்பங்கள் இருந்தன. குண்டுத் தாக்குதல்களின் போது எவ்வாறு எம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பது தொடர்பான பயிற்சிகள்; பாடசாலைகளில் அக்காலங்களில் இடம்பெறுவது வழமை.
இந்தப் போர்ச்சூழல், எனக்கு ஒவ்வொரு குண்டின் தன்மைகளைப் பற்றி அறிவதற்கு வாய்ப்பாக இருந்தது. ஒவ்வொரு குண்டும் அது எழுப்பும்  ஒலியினை வைத்து அக்குண்டினை ஏவும் ஆயுதம் பற்றி ஊகிக்ககூடியதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஆயுதத்தில் இருந்து குண்டு எப்படி வரும், எப்படி நிலத்தில் பட்டு வெடித்துச் சிதறும், எவ்விதமான தாக்கங்களை பௌதீகத்திற்கும், மனிதருக்கும் ஏற்படுத்தும், அதற்கேற்றவாறு எப்படி எம்மைப் பாதுகாக்க வேண்டும், என எம்மில் பெரும்பாலானோர் அறிந்திருந்தனர். இறுதி யுத்தத்தின் போது எமது பகுதிகளை நோக்கி இலங்கை அரசாங்கம் வானிலிருந்தும், கடலிலிருந்தும் நிலத்தின் நாலாபுறமுமிருந்தும் பலவிதமான புதிய முறைகளில், கொத்துக் குண்டுத் தாக்குதல்கள், 05G ரக மோட்டார் குண்டுத் தாக்குதல்கள், இரசாயன குண்டுத் தாக்குதல்கள் என பலவிதமான குண்டுத் தாக்குதல்களை எம்மீது நிகழ்த்தினர்.
போரின் இறுதிக் கட்டங்களில் ஏவப்பட்ட கொத்துக் குண்டுத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கொத்துக் குண்டுகள் ஆகாயத்திலேயே வெடித்து சிதறி நூற்றுக் கணக்கான உதிரிக் குண்டுகளை நிலத்தில் உதிர்த்தி விடுவதினால், அது பரவி விழுந்து வெடித்து அதிகளவு எண்ணிக்கையான உயிர்களைக் கொல்லும் தன்மையுடையது. நாலாபுறமும் இருந்து பலவிதமான குண்டுத் தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த போது கடலில் இருந்தும் டோரா கப்பல் மூலமும் குண்டுத் தாக்குதல்கள் புரிந்தார்கள். அதேநேரம் கடலில் இருந்து கனொன் குண்டுகளையும் ஏவினார்கள். இவை கண்ணுக்குத் தெரியாத சிறிய பந்தளவிலான குண்டுகள் ஆகும். இவை ஏவப்பட்டவுடன் எதில் தொடுகையை ஏற்படுத்துகின்றதோ அந்த கணத்திலேயே வெடித்து சிதறும்  தன்மையுடையதுடன் இக்குண்டு பகலில் ஏவப்படும்போது எதுவித ஒலியையோ, வெளிச்சத்தையோ ஏற்படுத்தாது. இதனால் பகல் பொழுதுகளில் மக்கள் பலர் குளிக்கும் போதும், மலசலம் கழிக்கும் போதும் இக்குண்டுத் தாக்குதலில் சிக்கி இறந்துள்ளனர்.
குண்டுத் தாக்குதல்கள் மனிதரின் உடல் தீவிர இரத்தக் காயங்களை ஏற்படுத்துமே ஒழிய உடலில்  தீக்காயங்கள் போன்று தோலினை சுட்டெரிக்கக் கூடிய தன்மையற்றது.  அதேவளை ஏதேனும் தீப் பற்றக்கூடியவைகளுக்கு மேல் விழுந்தால் ஒழிய அது தானாக எரிக்க  கூடிய குண்டுகள் அல்ல. ஆனால் இறுதி யுத்தத்தின் போது எமது பகுதிகள் மீது ஏவப்பட்ட குண்டுகளில் ஒன்று, அது வந்து நிலத்தில் விழுந்தவுடன் எமக்கு மிகவும் அருகாமையில் இருப்பவர்களைக் கூட அடையாளம் தெரியாத அளவிற்கு புகை மண்டலமாக இருக்கும். இப்படிப்பட்ட குண்டுகள் வெடித்த இடத்திலும் அருகாமையிலும் நின்றவர்களுக்கு உடலில் எரிவுகள் ஏற்பட்டதுடன், பலர் புகையை சுவாசித்ததில் இறந்தும் உள்ளனர். எனக்கு இப்போதும் ஞாபகம் உள்ளது, நானும் எனது குடும்பமும் இடம்பெயர்ந்து இருந்த வேளை ஒருநாள் ஒருவர் எம்மிடம் குண்டு விழுந்து வெடித்ததில் அதிலிருந்து எழுந்த பாரிய புகையினாலும், இரசாயன மணத்தினாலும் தனது மனைவி தீவிரமாகப் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையிலுள்ளாரென்றும் குழந்தையைப் பராமரிக்க யாருமில்லையென்றும் சிறிது நாட்கள் குழந்தையை வைத்திருக்கும்படியும், தான் பின்னர் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி எம்மிடம் அவரின் குழந்தையை ஒப்படைத்து விட்டுச் சென்றார். அவ்வாறான தாக்குதலிற் சிக்கிய அக்குழந்தையின் தோல் கருகி உடல் சிவப்பு நிறமாக காட்சியளித்தது. இது ஒருவித நஞ்சு அல்லது இரசாயனத்தின் விளைவாக இருக்க்கூடுமென நாங்கள் ஊகித்தோம். நாங்கள் பார்த்தவை மற்றும் அனுபவித்தவை பற்றிமட்டுமே எமக்குத்தெரியும். எங்களுக்கெதிராக எது பாவிக்கப்பட்டது, நாங்கள் எதனாற் பாதிக்கப்பட்டோம் என்பனபற்றி இதுவரை எமக்கெதுவும் தெரியாது.
எனது தந்தையார் 2009 இரண்டாம் மாதமளவில் ஷெல்லினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த வேளை அவருடன் நானும் உடனிருந்தேன்.  அப்போது வைத்தியசாலை  புது மாத்தளனில் உள்ள ஒரு பாடசாலையில் இயங்கிக் கொண்டிருந்தது. நான் அங்குதான் இறுதிப் போரின்  உக்கிரத்தைக் காணக் கூடியதாக இருந்தது. பொது மக்கள் பலர் காயப்பட்டு வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். போதிய மருந்துகள் இல்லாமலும், போதிய தங்குமிட வசதிகள்  இல்லாமலும் வெளிப் புறங்களில் மக்கள் மரங்களுக்கு கீழ் தங்க வைக்கப்பட்டு பெரிதும் சிரமங்களுக்குள்ளாக்கப்பட்டிருந்தனர். சத்திரசிகிச்சைகளும் மரங்களுக்கு கீழேயே நடந்து கொண்டிருந்தன.
இலங்கை அரசாங்கம் எமது பகுதிகளுக்கு 2008 நொவெம்பர் மாதத்திற்குப் பின்னர் மருந்துகள் அனுப்புவதை தடை செய்த படியினால் இறுதிப் போரில் பாதிக்கப்படுகின்ற பொது மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்கு மருந்துகள் இல்லாமல் மக்கள் பலர் அல்லலுற்றனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் சேவை மாத்திரம் காயப்பட்டவர்களை திருகோணமலை வைத்தியசாலைக்கு ஏற்றி செல்வதற்காக் கடலில் இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் அச்சேவையினை செய்து கொண்டிருக்கும் போது கூட அக்கப்பல்களுக்கு மிக அருகாமையில் இராணுவத்தின் குண்டுகள் விழுந்து அவ்விடத்திலும் காயங்களையும், இறப்புகளையும் ஏற்படுத்தியதால் செஞ்சிலுவைச் சங்கமும் தமது பணியை 2009 ஆம் ஆண்டு இரண்டாமாதமளவிலேயே இடைநிறுத்திவிட்டது.
பொதுமக்கள் தங்கிருந்த இடங்களை இலக்கு வைத்து இராணுவம் தாக்குதல்கள் நடாத்தினார்கள்.  வைத்தியசாலைகள் என்று தெரிந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக தங்கியிருந்த வைத்தியசாலைகளின் மீதும் இராணுவம் குண்டுத் தாக்குதல்கள் புரிந்தார்கள். அவர்களிடம் போதியளவு  தொழில்நுட்ப வசதிகள் இருந்தபடியினால் டிரோன் கமெராக்கள் மூலமும், அதிகூடிய பத்தாயிரம் இருபதாயிரம் வோல்ட்டேஜீகளுள்ள மின்குமிழ்களை ஒளிரவிட்டும் எமது பகுதிகளை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தும் வைத்தியசாலைகளின் மீது தாக்குதல்களைப் புரிந்தார்கள். வைத்தியசாலைகள் பாடசாலைகளின் கூரைகளில் அவைகளின் குறியீடுகள் வரையப்பட்டிருந்தும் தாக்குதல்களிலிருந்து தப்பமுடியவில்லை.
நாள் எனது காயப்பட்ட தந்தையுடன் தங்கியிருந்த புது மாத்தளனிலுள்ள வைத்தியசாலையிலிருந்து 600 அல்லது 800 மீற்றருக்கு அப்பால் இராணுவ முகாம் இருந்தது.  இராணுவம் டெலஸ்கோப்பினால் வைத்தியசாலையை அவதானிப்பதும் ஒலிபரப்பி மூலம் தம்மிடம் வந்து சரணடையும்படி அறிவிப்பதும் கூட வைத்தியசாலையினுள் கேட்கும். அந்த அளவிற்கு மிகவும் அருகில் இருக்கும் பொதுமக்கள் தங்கியிருக்கும் வைத்தியசாலையின் மீது இராணுவம் செல் தாக்குதல்கள் மேற்கொள்வதினால் அங்கேயே மக்கள் காயப்பட்டும் இறந்தும் கொண்டிருந்தனர்.
இவை மாத்திரமல்லாமல் பங்கருக்காக மண்நிரப்பி அடுக்கிவைக்கப்பட்டுள்ள மண்மூடைகள் விழுந்து மூச்சுத் திணறியும் மக்கள் இறந்தனர். இறுதி யுத்தத்தின் போது மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்த வண்ணமிருந்ததினால் அவர்கள் சென்று தற்காலிகமாக தங்குமிடங்களில் பங்கர் வெட்டி தமது உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய சூழலில் மாத்தளன், வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் போன்ற கடலை அண்டிய பிரதேசங்களில் மண்சரிவினால்  பங்கர் வெட்டமுடியாது. இதனால் பெண்கள் தாம் அணியும் புடைவைகளில் பைகள் தைத்து அவற்றுள் மண் நிரப்பி நிலத்திற்கு மேல் அம்மண்மூடைகளை அடுக்கி தமது உயிரைப் பாதுகாக்க முயற்சிகள் எடுத்தாலும், பாதுகாப்பற்ற அம்மண்மூடை ஒன்றின் மேல் ஒரு செல் துண்டு விழுந்து சிதறினால் அம்மூடைகள்  அனைத்தும் விழுந்துவிடும். அதில் மூச்சுத் திணறி பலர் இறந்துமுள்ளனர்.
முள்ளிவாய்க்காலிலிருந்து இருந்து வட்டுவாகலை நோக்கி பொதுமக்கள் இடம்பெயர்ந்து இராணுவத்திடம் சரணடைகின்ற 16, 17 ஆம் திகதிகளில் வீதியே தெரியாத அளவு  சனக் கும்பம் இராணுவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். மக்கள் சரணடைகின்ற வேளையில் இராணுவம் கைகளில் பெரிய பெரிய கொட்டான் தடிகளை வைத்துக் கொண்டு மிருகங்களை மேய்ப்பது போல் எம்மை நடத்தியது என் மனக் கண்முன் தற்போதும் உள்ளது. நாம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கொட்டான் தடிகளால் எம்மீது அடித்து எம்மை வீதியின் நடுவே உட்காரும் படி கட்டளையிடுவர். எதிர்த் தாக்குதலில் இருந்து தாம் தப்புவதற்கு நிமிடத்திற்கு ஒருமுறை எழுப்பியும் இருத்திறும் இராணுவம் எம்மை பயன்படுத்தியது.
இறுதியாக நாம் சரணடையும் தருவாயில் வட்டுவாகலைக் கடக்கும் போது மறுபுறத்தில் 250, 300 இற்கும் மேற்பட்ட இராணுவம் இருந்தனர். அவர்களின் சீருடை மற்றும் அவர்களது நடத்தைகளைப் பாhக்கும் போது அவர்கள் உயர் அதிகாரிகளைப் போன்று காட்சியளித்தனர். மாலை 04 மணியளவில் வட்டுவாகல் கடலினைக் கடந்து மறுபுறத்திற்கு சென்ற போது கிட்டத்தட்ட 05 ஏக்கர் வெட்டைவெளில் உயர்ந்த அளவில் கம்பிவேலிகள் அடைத்த இடமொன்றைத் தயார்படுத்தியிருந்தனர். அதனுள் எம்மை ஆடுமாடுகள் அடைப்பதனைப் போன்று 16ம் தகதி தொடக்கம் 18ம் திகதி வரைக்கும் அடைத்து வைத்திருந்தனர். தற்போது அந்த இடத்தில் தான் முல்லைத்தீவு நீதி மன்றம் உள்ளது.
குடிநீர், மலசலகூடம், உணவு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாத அந்த இடத்தில் மூன்று நாட்கள் நாங்கள் தொடர்ச்சியாக அடிமைகள் போல் தங்க வைக்கப்பட்டிருந்தோம். தாகம் தாங்க முடியாமல் தண்ணீர் கேட்டதற்கு இராணுவம் புல்டோசர் வாகனத்தின் மூலம் கிடங்கு கிண்டி அதிலுள்ள சேற்று நீரைக் குடிக்கும் படி கட்டளையிட்டது. மக்கள் வேறு வழியில்லாமல் அதிலுள்ள சேற்று நீரையே எடுத்து பருகி தாகத்தினைப் போக்கிக் கொண்டனர்.
அங்கு அடைக்கப்ட்டிருந்த அந்த மூன்று நாட்களிலும் 16,17,18 களில் இராணுவம் இயக்கத்தில் இருந்தவர்களை தம்மிடம் வந்து சரணடையும்படி அறிவித்துக் கொண்டிருந்தது. 18ம் திகதி இரவு 7.30, 8.00 மணியளவில் பொதுமக்களை இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் பொதுமக்கள் என ஆட்காட்டிகள் மூலம் பிரித்தெடுத்துக் கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கும் வரிசையில்; தலைகள் முற்றாக கறுப்புத் துணியினால் மறைக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 நபர்கள்; பிரித்தெடுக்கும் செயற்பாட்டிற்கு உதவிக் கொண்டிருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மிக நீண்ட வரிசையில் எம்மை நிற்கும் படி கூறி, கிட்டத்தட்ட 150 சிறிய சோதனை சாவடிகளை நிறுவி பொதுமக்களை இராணுவம் பரிசோதனை செய்ய ஆரம்பித்தனர். எமது சகல ஆடைகளும் களையப்பட்டு எம்மிடம் இருந்த உடைமைகள் அனைத்தும் பரிபூரணமாக பரிசோதிக்கப்பட்டதன் பின்னரே நலன்புரி முகாமிற்கு அனுப்புவதற்காக பஸ்களில் எம்மை ஏற்றினர். உடற் பரிசோதனைகள் நடாத்தும் போது ஆண்கள் பெண்கள் என எதுவித வேறுபாடுகளுமில்லாமல் ஆண் இராணுவ சிப்பாய்களே பெண்களையும் சில சோதனைச்சாவடிகளில் உடற்பரிசோதனை செய்தனர். பரிசோதனைகளின் போது மக்களிடம் இருந்த பணம், விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் என்பனவும் சில சிப்பாய்களினால் பறிக்கப்பட்டுள்ளது என்பதனை மக்கள் பஸ்ஸிற்காக காத்திருக்கும் போது புலம்பியதை கேட்கக் கூடியதாக இருந்தது.
இவ்வாறான தீவிர பரிசோதனைகளின் பின்னர் இரவு பஸ்களில் ஏற்றிய எம்மை விடிந்ததும் காலை 8.00 மணிக்குப் பின்னர் ஓமந்தையில் இறக்கிவிட்டனர். அங்கு மீண்டும் நீண்டதொரு வரிசையில் எம்மை நிறுத்தி பரிசோதனைகள், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. கொடுர வெயிலின் கீழ் நாம் தண்ணீரும் இல்லாமல் உணவும் இல்லாமல் பசியினாலும் தாகத்தினாலும் தவித்துக் கொண்டிருந்தோம். அந்நிலையிலும் மக்கள் வரிசையை விட்டு விலகியபோது பெரிய பொல்லுகளாலும் தடியினாலும் இராணுவம் எம்மைத் தாக்கினர். வயது முதிர்ந்தோர், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் என பலரும் இவ்வாறான இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது எம்மை மாலை 6.00 மணியளவில் பஸ்ஸில் ஏற்றி செட்டிகுளம் நலம்புரிமுகாமில் நள்ளிரவு 12.00 மணியளவில்; இறக்கிவிட்டனர். மன்னாருக்கும் வவுனியாவிற்கும் இடைப்பட்ட வெப்பவலயத்தில், காட்டுப் பிரதேசம் ஒன்றினுள் காடுகளை அகற்றி எதுவித அடிப்படை வசதிகளுமற்ற இடத்தில், கூடாரங்களை அமைத்து ஒரு கூடாரத்தினுள் இரண்டு குடும்பங்கள் என்று  செட்டிகுளத்தில்  நலன்புரி முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தோம்.
அவ்விடத்தில் போதுமானளவு தண்ணீர், உணவு, மலசல கூடங்கள், மருத்துவம் போன்ற எதுவித வசதிகளும்  கிட்டத்தட்ட ஒன்றரை மாதமளவிற்கு எமக்கு கிடைக்கவேயில்லை. ஒன்றரை மாதங்களுக்குப் பின்னரே சர்வதேச நலன்புரி நிறுவனங்கள் நலம்புரிமுகாமிற்குள் வருவதற்கு அனுமதித்தன் பின்னர் அவர்கள் மூலம் ஓரளவு உணவு, தண்ணீர், மலசலகூட வசதிகள் மருத்துவம் என்பன கிடைத்தும் அவை மக்களின் தொகைக்கேற்ப போதுமானதாக இல்லை. பொது மக்களை முகாமில் இருந்து வெளியில் செல்ல இராணுவம் அனுமதிக்காத படியினால், பொதுமக்கள் மருத்துவத்திற்கெல்லாம் நலன்புரி முகாமில் நாட்கணக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதுடன், முகாமினுள் மக்கள் இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
இறுதிப்போரில் சாப்பாடு இல்லாமல், தண்ணீர் இல்லாமல், மருத்துவங்கள் கிடைக்காமல், இராசயனப் புகைகளினை சுவாசித்து  உயிர் தப்பி வந்த மக்கள் நலன்புரி முகாமில் நோயினால் பாதிக்கப்பட்டு போதியளவு மருத்துவங்கள் கிடைக்காமல் இறந்ததில், எனது நண்பன் ஒருவனும் முகாமில் இருக்கும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான். அவனது குடும்பத்தினர் கடுமையான போரில் உயிர் தப்பிய தனது மகன் முகாமில் இருக்கும் போது இறந்ததினை நினைத்து மிகவும் துயருற்றிருந்தனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் நலன்புரி முகாமில் மிகவும் இன்னல்களுக்கு மத்தியில் தங்கியிருக்கும் போது 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் எம்மை எமது பகுதிகளுக்கு மீள்குடியேற்றம் செய்தார்கள். நாம் மீளவும் சென்று எமது ஊரைப் பார்க்கும் போது, இலங்கை அரசாங்கம் எமது உயிர்களை, எமது உறவுகளின் உயிர்களை மாத்திரம் பறிக்கவில்லை, நாம் மீளவும் கட்டியெழுப்ப முடியாதபடி எமது பொருளாதாரத்தையும் சிதைத்து விட்டிருந்தனர். எமது வீடுகள், எமக்கு செல்வமளிக்கும், தோட்டங்கள் வயல்கள், மரங்கள் என சகலதும் அழிக்கப்பட்டிருந்தன.
மக்களின் உயிர்கள், வாழ்வாதாரங்கள் இலங்கை அரசினால் அழிக்கப்பட்டாலும், இராணுவம் துயிலும் இல்லங்களை உடைத்து சிதைத்திருந்ததினைக் கண்ட மக்கள் துயர் தாங்காமல் அழுது புலம்பினர். யுத்தங்களின் போது தமது உறவுகளை பறிகொடுத்திருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனக் கருதி தமது குடும்ப முக்கிய நிகழ்வுகள் ஒவ்வொன்றிற்கும் வெகு தொலைவில் இருக்கும் துயிலும் இல்லங்களுக்குச் சென்று மரியாதை செலுத்திவந்ததன்  மூலம் மனத்திருப்தி அடைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு மாவீரர் நாளிற்கும் துயிலும் இல்லங்களுக்குச் சென்று அவ்விடங்களைப் பராமரித்து, பூமாலைகள் அணிவித்து விளக்கேற்றி, பொங்கல்  படையல் படைத்து அவ்வடங்களை கோயில் போலக் கருதி தமது உறவுகளை நினைத்து சுதந்திரமான முறையில் நினைவேந்தல்களை புரிந்துவந்தனர்.
தற்போது பொதுமக்கள் தமது உறவுகளை நினைத்து வழிபடமுடியாதளவிற்கு தீவிர கண்காணிப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளமை யுத்தம் நிறைவுற்றிருந்தாலும் இலங்கை அரசின் அடக்குமுறைகள் எம்பகுதி மீது தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன என்பதனையே காட்டுகின்றது. யுத்தத்திற்குப் பின்னரும் இராணுவம்  எமது பகுதிகளை விட்டு அகலவில்லை. அதே பகுதிகளில் இராணுவம் தாமும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். தோட்டங்கள் செய்தும் கடைகள் நடாத்தியும் மக்கள் மத்தியில் நல்லுறவினைப் பேண முயலுகின்ற போதிலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை. நல்லுறவினைப் பேணுவதற்காக, இறப்பு நடந்த வீடுகளுக்கு இராணுவம் வந்தாலும் அவர்களை மக்கள் இன்னும் பரிபூரணமாக எற்றுக் கொள்ளவில்லை, அரசு பல வழிகளில் நல்லிணக்கம் என்ற பெயரில் பலதை முயன்றாலும் பொதுமக்கள் எதனையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
நான் பிறந்ததில் இருந்து யுத்த சூழலில் வாழ்ந்தும் மிகவும் மோசமான இறுதிக்கட்ட யுத்தத்தினைக் கடந்தும் வந்த எனக்கு, எந்த சிக்கலான கடினமான சூழலையும் கடந்துவிடலாம் என்ற துணிச்சலான மனநிலை இருக்கும். சிலசமயம் இத்துணிச்சல் நம்பிக்கை தருவதாக இருந்தாலும், அது எனது யுத்த நினைவுகளின் இறுக்கமான மனநிலையை உணர்த்துவதாக இருக்கின்றது.
தற்போது   ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரும் எமது பகுதிகளில் தொடரும் சத்தமில்லாத யுத்தங்களான நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, என்னால் இயன்ற எனது எதிர்ப்பினை நான் பல வழிகளிலும் காட்டிவரும் போது நான் இழந்தவைகளை ஈடு செய்வது போன்று எனக்குக் கிடைக்கும் திருப்திகரமான உணர்வு, எனது போர்க்கால இழப்புகளை கையாளுவதற்கும் அதிலிருந்து முன்நோக்கி எனது வாழ்க்கையினை கொண்டு செல்வதற்கும் உறுதுணையாக இருக்கின்றன.